பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 246 

   (இ - ள்.) அடு கூற்றனான் கையுள் அம்கண் போது பிசைந்து - கொல்லுங் காலனைப் போன்ற அரசன் தன் கையில் இருந்த அழகிய கண் போன்ற மலரைப் பிசைந்து; செங்கண் புன் மயிர்த்தோல் திரை செம்முகம் வெங்கண் நோக்கின் குப்பாய மிலேச்சனை - சிவந்த கண்களையும் புல்லிய மயிர் நிறைந்த தோலையும் திரைந்த செம்முகத்தையும் கொடிய நோக்கத்தினையும் சட்டையையும் உடைய மிலேச்சனாகிய அவ்வாயில்காவலனை; செங்கண் தீவிழியாத் தெழித்தான் - தன் சிவந்த கண்களிலிருந்து நெருப்பெழ விழித்து நோக்கிச் சீறினான்.

 

   (வி - ம்.) இச் செய்யுளில் ஒரு கிழக்காவலன் உருவம் சொல்லோவியமாக்கப்பட்டிருத்தல் காண்க.

 

   ”அவன் அரசன் அன்மையின் கோபம் எளியார் மேற்றாயிற்று” என்னும் நச்சினார்க்கினியர் குறிப்பு மிகவும் நுண்ணியது. நூலாசிரியரும் அவ்வெளியானையும் சினத்தற்குத் தகுதியற்ற கிழப்பருவமுடையனாக்கி வைத்தனர். எய்தார் இருக்க அம்பை நோவது போன்ற கட்டியங்காரன் பேதைமையை ஆசிரியர் இச்சிறிய சூழ்ச்சியான் வெளிப்படுத்தும் அழகுணர்க. குப்பாயம் - மெய்ப்பை (சட்டை).

( 23 )

வேறு

 
432 கூற்றி னிடிக்குங் கொலைவேலவன் கோவ லர்வாய
மாற்ற முணர்ந்து மறங்கூர்கடற் றானை நோக்கிக்
காற்றின் விரைந்து தொறுமீட்கெனக் காவல் மன்ன
னேற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே.

   (இ - ள்.) கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் காவல் மன்னன் - காலனைப்போலச் சிறும் கொலை வேலேந்திய, நாட்டுக் காவலனாகிய வேந்தன்; கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து - இடையரின் வாய்மொழிப் பொருளை உணர்ந்து; மறம்கூர் கடல்தானை நோக்கி - வீரத்திற் சிறந்த கடலனைய தன் படையை பார்த்து; காற்றின் விரைந்து தொறுமீட்க என - காற்றினுங் கடுகி ஆனிரையைத் திருப்பிக் கொணர்க என்று; அரிமான் ஏற்றை இடிபோல இயம்பினான் - ஆண் சிங்கத்தையும் இடியையும் போலக் கூறினான்.

 

   (வி - ம்.) அரிமான் ஏற்றை - ஆண் சிங்கம். 'ஏறும் ஏற்றையும்' (தொல். மரபு. 2) என்றது காண்க. இடிக்கும் - சினக்கும். தொறு - அனிரை. ஏற்றையரிமானும் இடியும் போன்று முழங்கும் குரலானே கூறினன் என்பது கருத்து.

( 24 )