பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 248 

மிடைந்த தானை - வேலை யேந்திய நெருக்கிய அரசன் படை; வெம்சின எயினர் தாக்க - கொடுஞ்சினமுடைய வேடர்படை எதிர்த்துத் தாக்குமாறு; வால்வளை அலற இரலையும் துடியும் வாய்விட்டு ஆர்ப்ப - வெள்ளிய சங்கு முழங்கவும் துத்தரிக் கொம்பும் துடியும் வாய்விட்டு ஆரவாரிக்கவும்; பால் வளைந்து - ஒரு பக்கத்தே வளைத்துக்கொண்டு; செற்று இரவு பகலொடு மலைவது ஒத்தார் - சினந்து இரவும் பகலும் போரிடுவது போன்று பொருதனர்.

 

   (வி - ம்.) முந்நீர்மையுடைய கடல் முன்னர் வந்துளது (சீவக. 5) ஒடு : எண் ஓடு. வேடர் அரசர்க்கு எதிர்நிற்றலின் இரவும் பகலும் உவமையாயின. வளை தானைக்கும் துத்தரிக் கொம்பும் துடியும் வேடர்க்குங் கொள்க. நிரனிறை.

( 26 )
435 விற்பழுத் துமிழ்ந்த வெய்ய
  வெந்நுனைப் பகழி மைந்தர்
மற்பழுத் தகன்ற மார்பத்
  திடங்கொண்டு வைகச் செந்நாச்
சொற்பழுத் தவர்க்கு மாண்மை
  சொல்லலாந் தன்மைத் தன்றிக்
கொற்பழுத் தெரியும் வேலார்
  கொடுஞ்சிலை குழைவித் தாரே.

   (இ - ள்.) வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி - வேடர்கள் வில் குழைத்துச் சிந்தின விருப்பமுடைய கொடிய முனையையுடைய அம்புகள்; மைந்தர் மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக - அரசனைச் சார்ந்த வீரரின் மற்போரிலே பழகிப் பரந்த மார்பிலே இடம் பெற்றுத் தங்குதலாலே; செந்நாச் சொல் பழுத்தவர்க்கும் ஆண்மைசொல்லலாம் தன்மைத்து அன்றி - (அவர்கள்) செவ்விய நாவினாற் சொல்ல வல்லவர்க்கும் கூறவியலாத தன்மையுடன்; கொல்பழுத்து எரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித்தார்-கொல்லுத் தொழிலிலே பயின்று ஒளிவிடும் வேலேந்திய வேடர்களின் வளைவான வில்லைக் கெடுத்தார்கள்.

 

   (வி - ம்.) இனி, 'வேலார் தமது வில்லை வளைத்தார். அவ்வளவிலே வேடர் மைந்தரை வீட்டினார்' என அடுத்த செய்யுளிலும் முடிக்கலாம்.

( 27 )
436 வாட்படை யனுங்க வேடர்
  மாற்றவண்சிலை வளைய வாங்கிக்
கோட்புலி யினத்தின் மொய்த்தார்
  கொதிநுனைப் பகழி தம்மால்