பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 251 

யுடைய அழகிய நகரின் திருவாளனே !; வம்பு கொண்டிருந்த மாதர் வனமுலை - கச்சைக் கொண்டு அடிபரந்திருந்த காதலையூட்டும் அழகிய முலைகளை; தேன் சோர்கொம்பு கொண்ட அன்ன- தேன் ஒழுகு மலர்க்கொம்பொன்று தனக்கு உறுப்பாகக் கொண்டாற் போன்ற; நல்லார் கொழுங்கயல் தடங்கண் போலும் - மகளிரின் மதர்த்த கயலனைய பெரிய கண்களைப் போன்ற; அம்பு கொண்டு அரசர் மீண்டார் - அம்பை ஏற்று அரசர்கள் திரும்பினார்கள்; மறவர் ஆக கொண்டு போனார் - வேடர்கள் ஆனிரையை ஏற்றுச் சென்றனர்; என்றார் - என்றனர் ஆயர்.

 

   (வி - ம்.) அரசர் : கட்டியங்காரன் மக்களும், மதனனும்.

 

   உலகிற்கு அன்றி நகரத்திற்கு அரசனாகிய திருவாளனே என்றதனால் - அவர்களுடைய வெகுளி விளங்குகிறது.

 

   அரசர் அம்புகொண்டு மீண்டார் மறவர் ஆக்கொண்டு போனார் என்பதன்கண் இகழ்ச்சி தோன்றுதலுணர்க. அம்புகொண்டு மீண்டார் என்புழி அம்பை முதுகிலேற்றுக்கொண்டு மீண்டனர் என்க.

 

   செம்புகெண்டு இயற்றினாலனைய மதில் என்க ”செம்பியன்றன்ன செஞ்சுவர்” என்றார் மதுரைக் காஞ்சியினும் (485).

( 31 )
440 மன்னிரை பெயர்த்து மைந்தர்
   வந்தனர் கொள்க வாட்கட்
பொன்னிழை சுடரு மேனிப்
  பூங்கொடி யனைய பொற்பிற்
கன்னியைத் தருது மென்று
  கடிமுர சியம்பக் கொட்டி
நன்னகர் வீதி தோறு
  நந்தகோ னறைவித் தானே.

   (இ - ள்.) வாள்கண் பொன் இழை சுடரும் மேனிப் பூங்கொடி அனைய பொற்பின் கன்னியைத் தருதும் - வாளனைய கண்களையும் பொன்னணி ஒளிவிடும் மெய்யினையும் உடைய பூங்கொம்பு போன்ற அழகிய கன்னியைத் தருகிறோம்; மன்நிரை பெயர்த்து வந்தனர் மைந்தர் கொள்க - அரசனுடைய ஆனிரையைத் திருப்பிக் கொண்டு வரும் வீரர் அவளைக் கொள்க; என்று நல்நகர் வீதிதோறும் கடிமுரசு இயம்பக் கொட்டி - என்று அழகிய நகரின் தெருவிலெல்லாம் மிகுமுரசு முழங்கக் கொட்டி; நந்தகோன் அறைவித்தான் - நந்தகோன் சாற்றுவித்தான்.

 

   (வி - ம்.) [மன் நிரை : பெரிய நிரை என்பர் நச்சினார்க்கினியர். முன்னரும் 'மன்னவன் நிரை' (415) என வருதலானும், 'அரசனாற்