பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 265 

   மறைய, ஒருவர் பின்பு ஒருவராக நின்ற நல்லார்' என்பர் நச்சினார்க்கினியர். பொருந்துமேற் கொள்க.]

( 52 )
461 வாளரந் துடைத்த வைவே
  லிரண்டுடன் மலைந்த வேபோ
லாள்வழக் கொழிய நீண்ட
  வணிமலர்த் தடங்க ணெல்லா
நீள்சுடர் நெறியை நோக்கு
  நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற்
காளைதன் றோ்செல் வீதி
  கலந்துடன் றொக்க வன்றே.

   (இ - ள்.) வாள் அரம் துடைத்தவை வேல் இரண்டு உடன் மலைந்தவே போல் - வாளரத்தால் அராவின கூரிய வேல்கள் இரண்டு தம்முட் பொருதன போல; ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம் - ஆடவர் வரவினைப் போக்கி நீண்ட அழகிய மலரனைய பெருங்கண் எல்லாம்; நீள் சுடர் நெறியை நோக்கும் நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல் - பெரிய ஞாயிறுபோம் நெறியைப் பார்க்கும் நிரையிதழ்களையுடைய நெருஞ்சி மலர்களைப் போல ; காளை தன் தேர்செல் வீதி கலந்து உடன்தொக்க - சீவகனுடைய தேர்செல்லுந் தெருக்களிலே (கொடுமை செய்ய வியலாது) தம்மிற் கலந்து சேர நெருங்கின.

 

   (வி - ம்.) வாளரம் : அரங்களில் ஒருவகை.

 

   நெருஞ்சிப் பூ ஞாயிற்று மண்டிலம் இயங்குந்தோறும் அதற்கியையத் திரும்பி அதனை நோக்கும் இயல்புடையதாகலின் சீவகன் தேர் இயங்கு தொறும் இயங்கி அவனையே நோக்கும் மகளிர் கண்களுக்கு உவமை எடுத்தார்.

 

   இதனை,

 
  ”செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப்  
  பொன்புனை மலரின் புகற்சி போல” (2-4 : 14 - 5.)  

   என வரும் பெருங்கதையானும் உணர்க.

( 53 )
462 வடகமுந் துகிலுந் தோடு
  மாலையு மணியு முத்துங்
கடகமுங் குழையும் பூணுங்
  கதிரொளி கலந்து மூதூ
ரிடவகை யெல்லை யெல்லா
  மின்னிரைத் திட்ட தேபோற்
படவர வல்கு லாரைப்
  பயந்தன மாட மெல்லாம்.