பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 267 

464 னடையுளார் சொல்லிற் றெல்லா
  நம்பிசீ வகன்கட் கண்டாந்
தொடையலங் கோதை யென்று
  சொல்லுபு தொழுது நிற்பார்.

   (இ - ள்.) தொடையல் அம் கோதை ! - கட்டிய அழகிய மாலையினாய்!; கொடையுளும் ஒருவன் - கொடையிலும் ஒருவனே கொடுப்பான்; கொல்லும் கூற்றினும் கொடிய வாட்போர்ப் படையுளும் ஒருவன் - கொல்கின்ற காலனினும் கொடிய வாளாலியற்றும் போர்ப்படையிலும் ஒருவனே கெடுப்பான்; என்று பயம்கெழு பனுவல் நுண்ணூல் நடையுளார் சொல்லிற்று எல்லாம் - என நலம் பொருந்திய ஆராய்ச்சியுடைய நுண்ணிய நூலின் ஒழுக்கமறிந்தோர் கூறியதை எல்லாம்; நம்பி சீவகன்கண் கண்டாம் என்று சொல்லுபு தொழுது நிற்பார் - நம்பியாகிய சீவகனிடம் கண்டோம் என்று கூறித் தொழுது நிற்பார்கள் சிலமங்கையர்.

 

   (வி - ம்.) கொடையுளும், படையுளும் : உம் : உயர்வு சிறப்பும்மை. 'கொடையிலும் ஒருவனே சிறப்புறுவான்; படையிலும் ஒருவனே சிறப்புறுவான்' என்று நூலறிந்தோர் கூறுவர். 'எனினும், இவ்விரண்டும் இன்று சீவகனிடங் கண்டோம்' என்றனர். கொடையிற் சிறந்தோன் கன்னன். படையிற் சிறந்தோன் அருச்சுனன், 'ஒன்றல்லவை பல' என்பது தமிழ் நடை. ஆதலின், 'எல்லாம்' என்றார். சொல்லிற்றெல்லாம் : ஒருமை பன்மை மயக்கம்.

( 56 )
465 செம்மலைப் பயந்த நற்றாய்
  செய்தவ முடைய ளென்பா
ரெம்மலைத் தவஞ்செய் தாள்கொ
  லெய்துவம் யாமு மென்பா
ரம்முலை யமுத மன்னா
  ரகம்புலர்ந் தமர்ந்து நோக்கித்
தம்முறு விழும வெந்நோய்
  தந்துணைக் குரைத்து நிற்பார்.

   (இ - ள்.) செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவம் உடையள் என்பார் - (சிலர்) இத்தகைய சிறப்புடையானைப் பெற்ற தாய் தவமுடையள் என்பர் ; எம்மலைத் தவம் செய்தாள் கொல்? எய்துவம் யாமும் என்பார் - (சிலர்) அவள் எந்த மலையிலே தவம்புரிந்தனளோ, அங்கே யாமும் செல்வோம் என்பர்; அம்முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கி - அழகிய முலைகளையுடைய அமுதம் அனைய சிலர் நெஞ்சு வாடி விரும்பி நோக்கி; தம் உறு விழும வெந்நோய் - தம் மிக்க சீரிய