பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 268 

துன்பந்தரும் காம நோயை; தம் துணைக்கு உரைத்து நிற்பார் - தம் தோழிக்குக் கூறி நிற்பர்.

 

   (வி - ம்.) எம்மலைத் தவம் செய்தாள்கொல் என்பற்கு ”இவனை (கணவனாக)ப் பெற விருப்பவள் எம்மலையிலே நின்று தவஞ்செய்தாளோ” என்று விரிப்பர். 'தவம் செய்தார்கொல்' என்றும் பாடம். யாமும் அம் மலையை எய்தித் தவஞ்செய்து இவனை எய்த முயல்வேம் என்பார் எய்துவம் யாமும் என்றனர்.

( 57 )
466 சினவுநர்க் கடந்த செல்வன்
  செம்மல ரகல நாளைக்
கனவினி லருளி வந்து
  காட்டியாங் காண வென்பார்
மனவிரி யல்கு லார்தம்
  மனத்தொடு மயங்கி யொன்றும்
வினவுந ரின்றி நின்று
  வேண்டுவ கூறு வாரும்.

   (இ - ள்.) சினவுநர் கடந்த செல்வன்! - பகைவரை வென்ற செல்வனே!; செம்மலர் அகலம் நாளைக் கனவினில் அருளி வந்து யாம் காணக் காட்டி என்பார் - நின் செம்மலர் அணிந்த மார்பினை நாளைக் கனவிலே அருளுடன் வந்து யாம் காணக் காட்டுக என்பார் (சிலர்); மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும் வினவுநர் இன்றி - மேகலையொளி பரவிய அல்குலாராகிய சில மகளிர் தம் உளத்திலே மயங்கியவராய் ஒன்றையும் வினவுவார் இல்லாமலே; நின்று வேண்டுவ கூறுவார் - நின்ற இடத்திலே தாம் சீவகனிடம் விரும்பியவற்றைக் கூறுவார்கள்.

 

   (வி - ம்.) உம் : எண்ணும்மை. காட்டி : இகர வீற்று வியங்கோள்.

 

   இன்று நேரிற் கண்டதுகொண்டு இப் பகற்பொழுதில் ஒருவாறு ஆற்றியிருப்பேம் இரவுப் பொழுதினில் ஆற்றிகில்லேம் என்பார் ”கனவினில் அருளிவந்து காட்டுக என்றார்” என்பது கருத்து. வேண்டுவ - தாம் விரும்பியவற்றை.

( 58 )
467 விண்ணகத் துளர்கொன் மற்றிவ்
  வென்றிவேற் குருசி லொப்பார்
மண்ணகத் திவர்க ளொவ்வார்
  மழகளி றனைய தோன்றல்
பண்ணகத் துறையுஞ் சொல்லார்
  நன்னலம் பருக வேண்டி
யண்ணலைத் தவத்திற் றந்தார்
  யார்கொலோ வளிய ரென்பார்.