பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 278 

வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே - இலவ மலரனைய வாயிலுள்ள இனிய அமிர்தத்தை நுகர்ந்தான் அல்லனோ!; (ஆதலால்); குலம் நினையல் - நம் இருவரின் குலவேற்றுமையை நினையாதே (என்றான்).

 

   (வி - ம்.) பின்னை : பெயர்; இவள் இடைக்குலப்பெண். ந: சிறப்புப் பெயர் உணர்த்தும் இடைச்சொல். நச்சௌ்ளை, நப்பாலத்தன் , நக்கீரன் என்பன காண்க. நம்பின்னை என்பது விகாரப்பட்டது எனினும் ஆம்.

 

   முதலில் மணமகனாக என்றான். சீவகன் முகத்தே செவ்வி கண்டிலது எனவே, செல்வம் நிறைத்திடுவல் என்றான். பின்னுஞ் செவ்வி காணாமையின் குலம் நினைந்தான் போலும் என்று கருதி யிறுதியிலே குலவேற்றுமை கருதற்க என்றான்.

 

   நீ அரசர்குலத் தோன்றல் என்மகள் அக்குலத்திற் றாழ்ந்த ஆயர் குலத்துப் பிறந்தாளென்று கருதற்க என்பான் 'குலம் நினையல் நம்பி' என்றான். அங்ஙனம் கருதவேண்டாமைக்குப் பின்னர் ஏதுக் கூறுகின்றான். நறுந்தார் முருகன் என்றது இறைவன் மகனாகிய முருகனும் என்பதுபட நின்றது. கண்ணணின் சிறப்போதுவான் நிலமகட்குக் கேள்வனும் என்று விதந்தான். எங்குலமகள் என்பான் நிரை நப்பின்னை என்றான்.

 

   நச்சினார்க்கினியர் 480 முதல் 482 வரை உள்ள செய்யுட்களை ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு:

 

   'பைந்தாரோய். நம்பி, முலையினையும் காதலினையுமுடைய மடநோக்கி வெண்ணெய்போற் குழைந்து இனியள் : சொல்லள்; மேனியள்; அவையன்றி அவள் கண்களும் பூவிரண்டேகாண்; அவளை வரைந்தால் யாது ஆவது? யாமறிய முருகன் வள்ளிநலம் நுகர்ந்தானன்றே, திருமால் பின்னையைப் புணர்ந்தானன்றே; ஆதலால் குலத்தின் தாழ்வு கருதாது ஒழிக. இனி, யான் கூறியன வெல்லாம் திருவுள்ளம் பற்றி நின் அடிச்சியைக் கோதை சூட்டுவாயாக; சூட்டுமிடத்திற் கலியாணஞ் செய்தற்குச் சிறியேன் அல்லேன்; நெய்யும் பாலும் தயிரும் பாதாளமெல்லாம் நிறைப்பேன்” என்றான் என்க.

( 74 )

வேறு

 
483 கன்னியர் குலத்தின் மிக்கார்
  கதிர்முலைக் கன்னி மார்ப
முன்னினர் முயங்கி னல்லான்
  முறிமிடை படலை மாலைப்
பொன்னிழை மகளி ரொவ்வா
  தவரைமுன் புணர்தல் செல்ல
ரின்னதான் முறைமை மாந்தர்க்
  கெனமனத் தெண்ணி னானே.