பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 280 

   (வி - ம்.) நெஞ்சகங் குளிர்ப்பக் கூறிய வற்றிற் பதுமுகனுக்குக் கொடுக்குமாறு இசைவித்ததையுங் கொள்க.

 

   'சூட்டொடு கண்ணியன்றே' என்றது இடுந்தன்மை யன்றிச் சூட்டுந் தன்மையோடு கூடிய கண்ணியல்லவோ என்றும், நெற்றிச் சூட்டும் கண்ணியு மல்லவோ என்றும் இரண்டு பொருளுணர்த்தும். எனவே, மார்பிற்கு மாலையிடுக வென்றும், தலைமாலை சூட்டுகவென்றும் பெரும்பான்மையும் வழக்கு நடத்தலின் தலைமேல் வைக்கப்படுங் கண்ணியென்றான் என நந்தகோன் கருதினானாம். நெற்றிச் சூட்டு ஆடவர்க்காகாத தன்மையும், கண்ணி ஆடவர்க்கு ஆந்தன்மையும் போலத் தன் குலத்திற்கு ஆகாமையிற் சூட்டின் தன்மையும், பதுமுகன் [வணிகனாதலின்] அவன் குலத்திற்குச் சிறிது பொருந்துதலிற் கண்ணியின் தன்மையும் உடையனென்று சீவகன் கருதினானாம், கோபாலரினும் வாணிகஞ் செய்வாருளராதலின்.

 

   இனி, 'மாமான் எனக்குச் சூட்டொடு கண்ணியன்றே' என்றது : தனக்கு ஆகாமையிற் புலாலும், பதுமுகற்கு ஆதலிற் பூவுமாகக் கருதினான் என்றுமாம். (சூட்டு - இறைச்சி) இனி, ஆமான் என்று பிரித்து ஆமான் சூட்டு என்றுங் கொள்க. இனி, மா வட சொல்லாகக்கொண்டு ஆகாதென்றும் உரைப்பர்.

( 76 )
485 தேன்சொரி முல்லைக் கண்ணிச்
  செந்துவ ராடை யாயர்
கோன்பெரி துவந்து போகிக்
  குடைதயிர் குழுமப் புக்கு
மான்கறி கற்ற கூழை
  மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க்
கான்சொரி முல்லைத் தாரான்
  கடிவினை முடிக வென்றான்.

   (இ - ள்.) தேன் சொரி முல்லைக்கண்ணிச் செந்துவர் ஆடை ஆயர்கோன் - தேன் வாரும் முல்லைக் கண்ணியையுடைய சிவந்த துவரூட்டிய ஆடை அணிந்த இடையர் தலைவன்; கான்சொரி முல்லைத் தாரான் - மணங்கமழும் முல்லை மாலையான் ஆகிய நந்தகோன்; பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு - சாலவும் மகிழ்ந்து சென்று கடையும் தயிர் முழங்கப் புகுந்து; மான் கறி கற்ற கூழை மௌவல் மயிலைச் சூழ்பந்தர் - மான் கறித்துப் பழகியதனாற் கடை குறைந்த செம்முல்லையும் இருவாட்சியும் சூழ்ந்த பந்தரிலே; கடிவினை முடிக என்றான் - மணவினை நடைபெறுக என்று கூறினான்.

 

   (வி - ம்.) தயிர் முழங்கப் புகுதல் நன்னிமித்தம். துவரூட்டிய ஆடை அணிதல் இடையர் இயல்பு : 'துவருண்ணாடைச் சாய்கோல் இடையன்' (யா. வி.மேற்.) 'செந்துவராடை ஆயர்' (கலி. 102- 37) [இங்குக் கூறிய மணவினை திருமணத்திற்கு முன்பு நடைபெறும் 'சமாவர்த்தனம்' என்னும் சடங்கு என்பர் நச்சினார்க்கினியர்.]

( 77 )