இனி, வெள்ளிமலையிலுள்ள வித்தியாதர வேந்தனாகிய கலுழவேகன் என்பவன் தன் மகள் காந்தருவ தத்தைக்கு இராசமாபுரத்திலேதான் திருமணம் நிகழும் என்பதனை நிமித்திகரால் அறிந்திருந்தான். அக் கலுழவேகன் முன் கூறப்பட்ட சீதத்தன் வாயிலாய் அத் திருமணத்தை நிகழ்த்தக் கருதி அவனைத் தன்பாற் கொணரும் பொருட்டுத் தரன் என்னும் வித்தைவல்ல விச்சாதரனை ஏவினான். அத் தரன் தனது வித்தை வன்மையால் கடலிடையே ஓடிவந்த சீதத்தன் மரக்கலம் காற்றாலும் மழையாலும் கலக்குற்றுக் கடலிலே மூழ்கிவிட்டதுபோல அவனுக்குத் தோன்றும் படி செய்தான். இந் நிகழ்ச்சியால் மரக்கலம் பணி மாந்தர் பொருள் முதலியவற்றை இழந்த சீதத்தன், அம் மரக்கலத்தினின்றும் முறிந்து வீழ்ந்து மிதப்பதாகத் தனக்குத் தோன்றியதொரு மரத்துண்டத்தைப் பற்றிக் கொண்டு அண்மையிலிருந்ததொரு தீவின் கரையை அடைந்து பெரிதும் வருந்தியிருந்தான்.
|
|