பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 289 

   பொருள் மிகவும் கெட்ட நாய்கன் என்பர் நச்சினார்க்கினியர். நீணிதியம் : வினைத்தொகை.

( 1 )
494 மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வன்
கொன்னொழுகு வேலியவ தத்தன்குளிர் தூங்குந்
தன்வழிய காளைசீ தத்தனவன் றன்போற்
பொன்னொழுகு குன்றிலுறை போர்ப்புலியோ டொப்பான்.

   (இ - ள்.) கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும் தன் வழிய காளை சீதத்தன் - அச்சம் பரவி வேலேந்திய யவதத்தன் என இப்பொழுது மனையிடத்தே தங்கியிருக்கின்ற அவன் மரபில் தோன்றிய காளை போன்ற சீதத்தன் எனும்; மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன் - ஒளி பரவிய மென்மையுடைய மிகுதியான அணியணிந்த பதுமையின் கணவன்; தன் போல் பொன் ஒழுகு குன்றில் உறை போர்ப்புலியொடு ஒப்பான் - தந்தைக்கு ஒப்பான, பொன் பரவிய குன்றிலே போருக்கெழும் புலி போன்றவன்.

 

   (வி - ம்.) குளிர் - திசைச்சொல். குளிருமென்னும் வினைச்சொல் குளிரெனத் தொழில்மேல் நின்றது.

 

   எனவே அந் நாய்கன் பெயர் சீதத்தன், அவன் மனைவி பதுமை என்பவள், சீதத்தன் யவதத்தன் மகன், சீதத்தன் தன் தந்தையையே ஒப்பானவன், புலி போன்ற போர் வலிமை படைத்தவன் என்பன பெற்றாம்.

( 2 )
495 இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக்
கம்மியரு மூர்வர்களி றோடைநுதல் சூட்டி
யம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென்
றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே.

   (இ - ள்.) இம்மி அன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கிக் கம்மியரும் களிறு நுதல் ஓடை சூட்டி ஊர்வர் - இம்மி யவ்வளவு நுண்ணிய பொருள்களை ஈட்டிச் செல்வத்தை வளர்த்துப் பிறருக்குத் தொழில் செய்கின்றவரும் யானையின் நெற்றியிலே முகபடாம் அணிந்து ஏறிச் செல்வர்; (ஆகையால்); அம்மி மிதந்து சுரை ஆழ்ந்து அறம் வீழ்ந்தது - நீரிலே அம்மி மிதக்கவும் சுரை ஆழவுமாக அறங் கெட்டது; சால்க என்று - (எனவே) அமைதி பெறுக என்று; உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்று - பழவினையை எண்ணி வருந்தி அறத்துடன் மாறுபட்டுப் பிணங்குதல் உணர்வுடைமை ஆகாது.

 

   (வி - ம்.) இம்மியென ஈட்டிப் பெருநிதியாக்குதல்: நீண்டகால முயற்சியின் பொறுமையையும் பொருளீட்டலின் சிறப்பையும் விளக்கு