பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 29 

போல; காடு கை அரிக்கொண்டு கவர்ந்துபோய் - காட்டைத் திரைகளாகிய கைகளாலே அரித்தல் செய்து அப்பொருள்களை உள்ளடக்கிக்கொண்டுபோய்; மூரி நெடுங்கடல் நாடு முற்றியதோ என - பெரிய நெடிய கடல் நாட்டை வளைத்ததோ என்று மக்கள் வருந்துமாறு; மோடு கொள்புனல் நண்ணிற்று - பெரிய வெள்ளம் அந்நாட்டை அணுகியது.

 

   (வி - ம்.) வீடு : விகாரம்: விடுதல் என்னுந் தொழிற் பெயர்'தல்' விகுதி கெட்டு முதல் நீண்டு வீடு எனத் திரிந்தது; முதனிலை திரிந்த தொழிற் பெயர்.

 

   அரி : அரித்தல், முதனிலைத் தொழிற் பெயர். மூரி, மோடு : பெருமை என்னும் பொருளன.

( 9 )
39 திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமே
னுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரை1 யெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே.

   (இ - ள்.) திரைபொரு கனைகடற் செல்வன் நுகரக்கொள் - அலைமோதும் ஆரவாரம் மிகும் கடலாகிய தன் கணவன் துய்ப்பதற்குத் தன்னிடத்தே முற்கூறிய பொருள்களைக்கொண்ட, சரை எனும் பெயருடைத் தடம்வெம்முலைக் குரைபுனல் கன்னி-சரை என்னும் பெயரினையும் மணல்மேடாகிய விரும்பிய முலையினையும் உடைய ஒலிக்கும் புனலாகிய கன்னி; சூட்டுவான் நுரையெனும் மாலையைச் சென்னிமேல் கொண்டு இழிந்தது- அவனுக்குச் சூட்டுவதற்கு நுரையாகிய மாலையைத் தன் தலை மேல் கொண்டுவந்தது.

 

   (வி - ம்.) சரை யென்னும் பெயரினையும் தடமாகிய விரும்பிய முலையினையும் உடைய புனலாகிய கன்னி ; தடம் முலைபோற் சுரத்தலின் முலையாம் . கொள் கன்னி : வினைத்தொகை. கன்னி என்னும் விசேடிக்கப் படுஞ் சொல்லை நீர் விசேடித்து அஃறிணையாக்குதலின், இழிந்ததென்றார். என்ப : அசை ; இது புறனடையாற் கொள்க (தொல் - இடை -48) இவ் விதி மேலுங் கொள்க.

 

   சூட்டுவான்: எதிர்கால வினையெச்சம். 'தடம் கொள்' என்னுந் தொடரிலுள்ள கொள் என்னுஞ் சொல்லைக் கன்னியுடன் இயைத்துக் 'கொள் கன்னி' எனக் கூட்டிக்கொள் என்பதற்குச் செயப்படுபொருளாக முற்செய்யுளிற் கூறிய காட்டுப் பொருள்களை வருவித்துக் கூறினார். 'செல்வன் சென்னிமேல் சூட்டுவான்' என அமைந்த தொடரிலிருந்த 'சென்னிமேல் என்பதைக்' குரைபுனற் கன்னி சென்னிமேல்' என மாற்றிக் கூறினார். இவ்வாறு கூறாமற் செல்வன் சென்னிமேற் சூட்டுவான் நுரையெனும் மாலையைக் கொண்டு சென்றதாகக் கூறினும் பொருள் கெடுமாறில்லை.

( 10 )

(பாடம்) 1. சரவெனும்.