பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 292 

நீங்கல் மடவார்கள் கடன் - அங்ஙனம் தாங்காது நீங்கிப் போதல் அறிவிலாதவரின் கடமையாகும்; என்று எழுந்து போந்தான் - என்று கூறி எழுந்து பொருளீட்டப் புறப்பட்டான்.

 

தலைசாய்க்க வருதீச்சொல் தாங்கல் கடனாகும் என மாறுக. பிறத்தற்கு முன்னர் என வருவித்துரைக்க. இச் செய்யுளோடு,

 
  ”சிதலை தினப்பட்ட ஆல மரத்தை  
  மதலையாய் மற்றதன் வீமூன்றி யாங்குக்  
  குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற  
  புதல்வன் மறைப்பக் கெடும்.” (நாலடி. 197)  

என வரும் நாலடி வெண்பாவை ஒப்பு நோக்குக.

 
  ”இற்பிறந்தார் கண்ணேயு மின்மை இளிவந்த  
  சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.” (குறள். 1044)  

   என்பதுபற்றி 'தலைசாய்க்க வருதீச்சொல்' (பிறவாமுன்) என்றான் என்க.

( 6 )
499 மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி
மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற
தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன்
கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான்.

   (இ - ள்.) மாது படு நோக்கினவர் வாட்கண் வடு உற்ற-பெருமை பொருந்திய நோக்கினையுடைய மங்கையரின் ஒளி தவழுங் கண்கள் தாக்கிய வடுவினைக் கொண்ட; தாடு படு தார் கெழிய தங்கு வரை மார்பன் - தாது பொருந்திய மாலை பொருந்திய நிலைபெற்ற மலைபோலும் மார்பன்; மோதுபடு பண்டம் பெரிது முனியாது ஏற்றி - நிறைந்த பொருள்களை வெறுப்பின்றி மிகுதியாகக் (கலத்தில்) ஏற்றி; கோது படல் இல்ல குறிக்கொண்டு எழுந்து போந்தான் - குற்றம் அற்ற நல்ல பொழுதை அறிந்து கடற்கரைக்கு வந்தான்.

 

   (வி - ம்.) வாட்கண் வடு ஒளி பொருந்திய கண்களாகியமா வடுக்கள் என்றுமாம். நச்சினார்க்கினியர், 'இவன் மார்பைப் பார்த்தலால் ஒளி மிகுங் கண்கள் மழுங்குமாறு' என்றும், 'வடுஉற்ற கண் தங்கும் மார்பு' என்று ஆக்கி 'மாவடு போன்ற கண் தங்கும் மார்பு' என்றும் பொருள் கூறுவர்.

 

   மோதுபடு பண்டம் என்றது பண்டகசாலையின் உச்சியில் மோதுதல் உண்டாக மிக்க பண்டத்தை என்க. மாதுபடு நோக்கு என்றற்குக் காதல் தோன்றுதற்கிடமான நோக்கம் எனினுமாம். கெழிய - கெழுவிய; பொருந்திய. கோதுபடலில்லகுறி என்றது, நன்முழுத்தத்தை.

( 7 )