பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 294 

   முழக்கும் பண்டைக்கால வழக்கம் உணரப்படும். பவளக்கொடி கடலின் கண்ணுளதாகலின் அதனை அறுத்துக்கொண்டோடிற்று என்க.

( 9 )
502 திரைகடருஞ் சங்குகலந் தாக்கித் திரண்முத்தம்
கரைகடலுட் காலக்கணை பின்னொழிய முந்நீர்
வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவி
னிரையிடறிப் பாய்ந்திரிய வேகியது மாதோ.

   (இ - ள்.) திரைகள் தரும் சங்கு கலம் தாக்கி - அலைகள் தரும் சங்குகள் கலத்தைத் தாக்குதலால்; திரள் முத்தம் கரை கடலுள் கால - திரண்ட முத்துக்களை ஒலிக்குங் கடலிலே அச்சங்குகள் சொரிய; முந்நீர் வரை கிடந்து கீண்டது எனக்கீறி - கடலினை ஒரு மலை நில்லாமற் கிடந்து கிழித்தது என்னுமாறு கிழித்து; வளர் தீவின் நிரை இடறி - மிகுந்த தீவுகளின் ஒழுங்கைக் கெடுத்து; பாய்ந்து கணை பின் ஒழிய இரிய-குதித்துத் தன் மேலிருந்து எய்த அம்பு பிற்பட்டுக்கெட; ஏகியது - சென்றது.

 

   (வி - ம்.) மாது ஓ : அசைகள். 'முந்நீர் வரை கிடந்து கீண்டது' இல்பொருளுவமம்.

( 10 )
503 மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பார்
அன்னமொடுந் தோகைநடை சாயலமிர் தன்னார்
துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க
நன்மையுடை நன்பொன்விளை தீவமடைந் தஃதே.

   (இ - ள்.) மின்னும் - விளக்கத்தால் மின்னையும்; பூங்கொடியும் - அசைவினாற் பூங்கொடியையும்; மென்மலரும் - மென்மையால் மலரையும்; ஒப்பார் - ஒப்பானவர்களும்; நடை சாயல் அன்னம் தோகை அமிர்து அன்னார் - நடை அன்னத்தொடும் மென்மை மயிலொடும் உவமை கொண்டவர்களும் ஆகிய மகளிர்; துன்னி இனிது ஆக உறை - மிகுந்து இனிமையாக வாழும்; துப்புரவின் மிக்க - நுகர் பெருள்களாற் சிறந்த; நன்மையுடை நன்பொன் விளை தீவம் அடைந்தஃது - நன்மையுற்ற நல்ல பொன் விளையும் தீவினை அடைந்தது அக்கலம்.

 

   (வி - ம்.) அடைந்தஃது : ஆய்தம் வி்ரித்தல் விகாரம். எண் ஒடுவை இறுதியிற் சேர்க்க.

 

   மின் விளக்கமுடைமைக்கும் கொடி அசைவிற்கும் மலர் - மென்மைக்கும் அன்னம் நடைக்கும் தோகை சாயற்கும் உவமைகள் அமிர்தன்னார் என்பது வாளா மகளிர் என்னும் மாத்திரை. துப்புரவு - நுகர் பொருள்.

( 11 )