பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 303 

516 ஓடுந் திரைக ளுதைப்ப வுருண்டுருண்
டாடு மலவனை யன்ன மருள்செய
நீடிய நெய்தலங் கான னெடுந்தகை
வாடி யிருந்தான் வருங்கல நோக்கா.

   (இ - ள்.) நீடிய நெய்தல் அம் கானல் - பரவிய நெய்தல் நிலத்திற் கடற்கரையிலே; ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு ஆடும் அலவனை - ஓடுகின்ற அலைகள் தள்ள உருண்டு உருண்டு அலையும் நண்டினை; அன்னம் அருள் செய - அன்னம் ஆதரிக்க; நெடுந்தகை வருங்கலம் நோக்கா வாடி இருந்தனன் - நெடுந்தகையான சீதத்தன் அதனை நன்னிமித்தமாக நினைந்து, தனக்கு ஆதரவாக ஏதாயினும் கலம் வருமென்று நோக்கியவாறு வாடியிருந்தான்.

 

   (வி - ம்.) அன்னம் கொல்லாதிருந்த தன்மை, தான் பற்றுக் கோடாக வாழ்வாரைக் காலான் உதைத்துக் கடல் நம்முன்னே தள்ளவும் போக்கற்றுப் பின்னும் அதனிடத்தே செல்லாநின்ற தென்று நோக்கி அதற்கு அருளினாற் போலேயிருந்தது.

 

   அலைகள் பழவினையாகவும் அலவன் தானுமாய் அதனை அருள் செய்த அன்னத்தை இனித் தனக்குண்டாகும் ஆகூழாகவும் மதித்து அவ்வன்னம் போலத் தன்னைக் காப்பாற்ற ஒரோவழி மரக்கலம் ஏதேனும் வருவதோ என்று எதிர்பார்த்திருந்தான் என்பது கருந்து.

( 24 )
517 ஆளிய மொய்ம்ப னிருந்தவப் பூம்பொழிற்
றாள்வலி யானொர் மகனைத் தலைப்பட்டுக்
கேளி ரெனக்குற்ற கேண்மின் னீரெனத்
தோள்வலி மிக்கான் றொடர்ந்துரைக் கின்றான்.

   (இ - ள்.) ஆளிஅ மொய்ம்பன் தோள்வலி மிக்கான் - ஆளி போன்ற வலிமையாளனாகிய தோளாற்றல்மிக்க சீதத்தன்; இருந்த அப் பூம்பொழில் - இருந்த அந்தப் பூங்காவிலே; தாள் வலியான் ஓர் மகனைத் தலைப்பட்டு - முயற்சியுடையானாகிய ஒருவனைக் கண்டு; கேளிர்! எனக்கு உற்ற நீர் கேண்மின் என - கேளிரே! எனக்கு நேர்ந்த துன்பங்களை நீர் கேட்பீராக என்று; தொடர்ந்து உரைக்கின்றான் - இடைவிடாமற் கூறுகிறான்.

 

   (வி - ம்.) தாள்வலியான் : தரன் என்னுங் கந்தருவன். அவனே இவனை நாடிவந்தான். ஆய : அ : அசைநிலை. சுட்டும் ஆம்

 

   இடுக்கணழியாமை கருதி ஆளி மொய்ம்பன் என்றும் தோள்வலிமிக்கான் என்றும் கூறினார். தாள் - முயற்சி. ஓர் மகனைத் தலைப்பட்டு என்பது அவன் நினைத்தவாறே தன் ஆகூழ் கொணர ஆண்டுவந்த ஒருவனைத் தலைப்பட்டென்பதுபட நின்றது. கேளிர் : விளி. நண்பீர் என்று விளித்தபடியாம்.

( 25 )