பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 304 

518 கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து
திருந்திய தன்பொருள் தீதுற்ற வாறும்
அரும்புணை சார்வா அவண் உய்ந்த வாறும்
இருந்தவற் கெல்லாம் எடுத்து மொழிந்தான்.

   (இ - ள்.) கருங் கடல் போயிற்றும் - கரிய கடலிலே பொருள் தேடப் போனதையும்; காற்றில் கவிழ்ந்து திருந்திய தன் பொருள் தீது உற்ற ஆறும் - கலம் காற்றிலே கவிழ்ந்து நல்வழியில் ஈட்டிய தன் பொருள் கெட்டதையும்; அரும்புணை சார்வா அவண் உய்ந்த ஆறும் - அரிய கூம்புத் துண்டமாகிய தெப்பம் ஆதரவாக அங்கே வந்ததையும்; எல்லாம் - யாவற்றையும்; இருந்தவற்கு - அங்கேயிருந்த தரனுக்கு; எடுத்து மொழிந்தான் - தெளிவாக விளம்பினான்.

 

   (வி - ம்.) தீதுறத் தகாத பொருள் என்பார் திருந்திய பொருள் என்றார். கவிழ்ந்து என்னும் செய்தெனெச்சத்தைக் கவிழ எனச் செயவெனெச்சமாக்குக. எதிர்பாராமற் கிடைத்த புணை ஆகலின் அரும்புணை எனப்பட்டது. இருந்தவன் - தரன்: வினையாலணையும் பெயர்.

( 26 )
519 மானும் மரனும் இரங்க மதவலி
தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்
றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியன
வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான்.

   (இ - ள்.) மதவலி மானும் மரனும் இரங்க - சீதத்தன், விலங்கும் மரமும் இரக்கமுறுமாறு; தரனுக்குத் தான் உற்ற துன்பம் உரைத்தபின் - தரனுக்குத் தான் அடைந்த துன்பத்தை உரைத்த பிறகு; தேனும் அமிழ்தும் திளைத்த ஆங்கு இனியன - தேனும் அமிழ்தமும் நீங்காற் பெறாற்போல இனியவாகிய; ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான் - குற்றமற்ற (தரனுடைய) உறுதி மொழிக்கு அகம் குளிர்ந்தான்.

 

   (வி - ம்.) அக் கட்டுரை அடுத்த செய்யுளிற் கூறப்படுவது. ஊனமில் கட்டுரை என்பதனை, 'அத் துன்பத்திற்கெல்லாம் கழுவாயாக நின்னைப் பெற்றேனே' என்று சீதத்தனே கூறுவதாக ஆக்குவர் நச்சினார்க்கினியர். 'உரைத்தலின்' என்ற பாடத்திற்குத் தரன் கூறியதற்குச் சீதத்தன் மகிழ்ந்தான் என்று கொள்வதால் அவருக்கும் இவ்வாறு கூறுதல் உடன்பாடாமாறு காண்க.

 

   மதவலி : அன்மொழித் தொகை; ஈண்டுச் சீதத்தன் என்க.

( 27 )