பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 305 

520 விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ
டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள்
வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன்
னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான்.

   (இ - ள்.) விஞ்சைகள் வல்லேன் - யான் பலவிஞ்சையினும் வன்மையுடையேன்; விளிந்த நின் தோழரொடு எஞ்சிய வான் பொருள் எல்லாம் - மடிந்த நின் நண்பருடன் கெட்டுப்போன சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும்: வஞ்சம் ஒன்று இன்றி இமைப்பினுள் மறித்தே தருகுவன் - வஞ்சனை சிறிதும் இல்லாமல் ஒரு நொடியிலே திரும்பக் கிடைக்குமாறு தருவேன்; நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான் - உள்ளத்திற் கலங்கி நினையாதீர் என்று தரன் கட்டுரை கூறினான்.

 

   (வி - ம்.) 'நின் தோழரோடு' என ஒருமையாகவும், 'நினையன்மின்' எனப் பன்மையாகவும் கூறியதால் இஃது ஒருமை பன்மை மயக்கம். நினையன்மின் என்றது ஒருவரைக் கூறும் பன்மை. விஞ்சை - வித்தை. எஞ்சிய - கழிந்த. வான்பொருள்- அறத்தாற்றின் ஈட்டிய பொருள்

( 28 )
521 உரையகங் கொள்ள வுணர்த்தின னாகி
வரையக மேற வலிமின மென்னா
விரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக்
குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான்.

   (இ - ள்.) உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி - (தருகுவன் என்ற) உரையைச் சீதத்தன் மனம் ஒப்புமாறு உணர்த்தியவனாய்; வரையகம் ஏற வலிமின் என்னா - இம்மலைமீது செல்ல மனத் துணிவு கொள்வீராக என்றுகூறி; விரைசெலல் வெம்பரி மேழகம் ஏற்றி - விரைந்த செலவையுடைய விரும்பத்தக்க பரியைப்போன்ற ஆட்டுக் கடாவின்மேல் ஏற்றி; குரைகழல் மைந்தனைக் கொண்டு பறந்தான் - ஒலிக்குங் கழலணிந்த சீதத்தனைக் கைக்கொண்டு வான்வழியே பறந்தான்.

 

   (வி - ம்.) வலிமினம், அம் : அசை. வெம்பரி விரைசெலல்மேழகம் என மாறிக் குதிரைபோன்ற விரைந்த செலவையுடை மேழகம் எனினுமாம். மேழகம் - ஆட்டுக்கடா

( 29 )
522 விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பகும்புயற் றண்டுளி பக்க நனைப்ப
நயந்தனர் போகி நறுமலர்ச் சோலை
யசும்பிவர் சார லருவரை சார்ந்தார்.