பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 308 

இருண்ட அவ்வெள்ளிமலை; மாகத்து விளங்கித் தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால் - வானத்திலே விளக்கமாகத் தோன்றும் அழகை நாம் விளக்கிக் கூறத் தொடங்கினால்; தான் கரியது ஒன்று நாகம் கீழ்நின்று நடுங்கக் கல்வி - தான் நிறம் கரியதாகிய ஒரு பாம்பு கீழே நின்று நடுங்குமாறு பற்றி; பாகமே விழுங்கப்பட்ட பால்மதி போன்றதே - பாதியே விழுங்கப்பெற்ற வெண்மதியைப் போன்றது என்று கூறலாம்.

 

   (வி - ம்.) அன்று : அசை. ஏ : தேற்றம்.

 

   அடிப்பகுதி முகிலாற் சூழப்பட்டுள்ள வெள்ளி மலைக்குத் தேவர் கூறும் உவமை மிகவும் இனிதாதலுணர்க. மாகம் - விசும்பு. கரியதொன்று என்றது இராகுக்கோளினை. அம்மலை மேக மண்டலத்தையும் கடந்து உயர்ந்து நிற்றலால், பாகமே விழுங்கப்பட்ட மதி என்றார். பாகம் - பாதி கூறலாம் வேறு அரிது என்பது எச்சப்பொருள்.

( 34 )
527 துளங்குபொன் னகரின் றன்மை
  சொல்லலாஞ் சிறிதோர் தேவன்
விளங்குபொன் னுலகத் துள்ள
  துப்புர விடங்க ளெல்லா
மளந்துகொண் டின்பம் பூரித்
  தணிநக ராக்கி மேலா
லிளங்கதிர்ப் பருதி சூட்டி
  யியற்றிய தென்ன லாமே.

   (இ - ள்.) துளங்கு பொன் நகரின் தன்மை சிறிது சொல்லலாம் - ஒளிவிடும் பொன் நகரின் இயல்பை நாம் சிறிதே கூற முடியும்; விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம் - விளக்கமான பொன் உலகிலே உள்ள நுகர் பொருள் நிறைந்த இடங்களையெல்லாம்; அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணிநகர் ஆக்கி - அளந்துகொண்டு வந்து இன்பத்தை நிறைவித்து அழகிய நகரம் ஆக்கி; மேலால் இளங்கதிர்ப் பருதிசூட்டி - மதியனைய அம்மலையின் தலையிலே இளமையான கதிரையுடைய ஞாயிற்றை மதிலாக அமைத்து; ஓர் தேவன் இயற்றியது என்னலாம் - ஒரு வானவன் நிறுவியது என்று கூறலாம்.

 

   (வி - ம்.) பருதி - வட்டம் : மதிலுக்கானமையின் பண்பாகுபெயர். இங்குக் கூறியது பொன்மதில் - 'அத்தேர்ப் பருதி சுமந்து எழுந்த யானை' (களவழி - 4) என்றார் பிறரும்.

 

   மானிடராகிய நம்மனோர் அந்நகரின் தன்மையை முற்றக் கூறுதல் இயலாது ஆயினும் எம்மறிவிற் கொடியவாறு கூறுவேம் என்பார். நகரின் தன்மை சிறிது சொல்லலாம் என்றார். துப்புரவு - நுகர்பொருள்.