பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 310 

530 திருவ மேகலை தௌ்ளரிக் கிண்கிணி
பரவை யாழ்குழல் பண்ணமை மென்முழா
வுருவம் யாருடை யாரென் றொளிர் நக
ரரவ வாய்திறந் தார்ப்பது போன்றதே.

   (இ - ள்.) ஒளிர் நகர் - விளக்கமிகும் அந் நகரில்; திருமேகலை தௌ் அரிக் கிண்கிணி பரவை யாழ் பண்அமை குழல் மென் முழா அரவம் - பெண்களின் அழகிய மேகலை, தெளிந்த ஓசையுறும் பரல்களையுடைய கிண்கிணி, பேரியாழ், இசை பொருந்திய குழல், முழவு ஆகியவற்றின் ஒலி; உருவம் உடையார் யார் யார் என்று - என்னைப்போன்ற அழகுடையார் யார் என்று; வாய்திறந்து ஆர்ப்பது போன்றது - (அந்நகர்) வாய்திறந்து ஆரவாரிப்பதைப் போன்றது.

 

   (வி - ம்.) திருவ : அ : அசை.

 

   மகளிர்க்கு ஆகுபெயர். அழகிய மேகலை எனினுமாம். தௌ் அரி - ஆராய்ந்திட்ட பரலுமாம். பரவை யாழ் - பேரியாழ். என்னைப் போன்ற என்பது இசையெச்சம்.

( 38 )
531 செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்திய
வம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள்
வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற்
பைம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே.

   (இ - ள்.) செம்பொன் மாடங்கள் சென்னி அழுத்திய - செம்பொன் மாடங்களின் முடியிலே அழுத்தப் பெற்ற; அம்பொன் திண் நிலை ஆய் மணித் தூவிகள் - அழகிய பொன்னால் திண்மையான நிலைபெறக் கட்டப்பெற்ற, ஆராய்ந்த மணித்தூவிகள்; வெம்பும் நீள்சுடர் வீழ்ந்து சுடுதலின் - ஞாயிற்றின் வெம்மையுடைய நீண்ட கதிர்கள் தங்கிச் சுடுதலினாலே; பைம்பொன் கொப்புள் பரந்தன போன்ற - புதிய பொன் உருகிக்கொப்புளம் பரவின போன்றன.

 

   (வி - ம்.) தூவி: மாட வீடுகளின் உச்சியிலே அமைப்பது. தூவிகள் கொப்புள் பரந்தன போன்றன. 'ஞாயிறு தாழ்ந்து சுடுதலால்' என்பர் நச்சினார்க்கினியர், தற்குறிப்பேற்ற வுவமை.

( 39 )
532 உருளி மாமதி யோட்டொழித் தோங்கிய
வெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின்
மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத்
தருளி னாலழ லாற்றுவ போன்றவே.