பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 317 

   இனிய உரையாலே முகமன் மொழிந்து; தானத்தில் இருக்க என்றான் - அரசர்க்குரிய இடத்திலே இருக்க என்று (இருவரையும்) கூறினான்.

( 50 )
543 முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப
வதிர்குரன் முரச நாண வமிர்துபெய்ம் மாரி யேய்ப்பக்
கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதன்
மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான்.

   (இ - ள்.) முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய்விட்டது ஒப்ப - முற்றிய பெயலையுடைய பெருமையான முகில் அதிர்ந்து வாய் திறந்தாற் போலவும்; அதிர்குரல் முரசம் நாண - அதிர்ந்த குரலையுடைய முரசு வெள்கவும்; அமிர்து பெய்ம்மாரி ஏய்ப்ப - அமிர்தத்தைப் பெய்யும் முகிலைப் போலவும், கதிர்விரி பூணினாற்கு - ஒளி வீசும் அணியுடைய சீதத்தனுக்கு; தந்தை தாய் தாரம் காதல் மதுரமா மக்கள் சுற்றம் வினவி - தந்தையையும் தாயையும் மனைவியையும் அன்புடைய இனிய மக்களையும் உறவையும் கேட்டறிந்து; மற்று இதுவும் சொன்னான் - மேலும் இதனையுங் கூறினான்.

 

   (வி - ம்.) 'வான் சத்தத்திற்கும், முரசு முழக்கத்திற்கும், மாரி கேட்டற்கும் இனிமைக்கும் உவமை' - என்பர் நச்சினார்க்கினியர்.

( 51 )
544 இன்றைய தன்று கேண்மை
  யெமர்நும ரெழுவர் காறு
நின்றது கிழமை நீங்கா
  வச்சிர யாப்பின் னூழா
லன்றியு மறனு மொன்றே
  யரசன்யான் வணிக னீயே
யென்றிரண் டில்லை கண்டாய்
  யிதுநின தில்ல மென்றான்.

   (இ - ள்.) கேண்மை இன்றையது அன்று - நம் நட்பு இன்றைக்குத் தோன்றியதன்று; வச்சிர யாப்பின் நீங்கா ஊழால் - வச்சிரத்தால் இட்ட எழுத்தைப்போல நீங்காத நல்வினையாலே; எமர் நுமர் எழுவர் காறும் நின்றது கிழமை - எமரெழுவர் நுமரெழுவர் அளவும் (ஏழு கிழமையும் போல) ஏற்றிழிவின்றி நின்றது நங்கேண்மை; அன்றியும் அறனும் ஒன்றே - மேலும் நம் கொள்கையும் ஒன்றே; அரசன் யான் வணிகன் நீ என்று இரண்டு இல்லை - (ஆதலால்) நான் அரசன் நீ வணிகன் என்று இரண்டு சாதியில்லை; இது நினது இல்லம் என்றான் - இது நின் வீடு என்றான்.