பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 318 

   (வி - ம்.) கிழமை - உரிமையுமாம்: நீயே; ஏ: அசை. கண்டாய். முன்னிலையசை. வச்சிரயாப்பு - வச்சிரத்தால் தலையிலிட்ட எழுத்து. 'வச்சிர நுதியி னிட்ட எழுத்தனான்' (சீவக. 1534)

 

   எழுவர் என்பதனை எமர் என்பதனோடும் கூட்டுக. அறனும் ஒன்றே என்றது நாமிருவரும் ஒரே சமயத்தி னிற்போரே என்றவாறு. இது மதவேற்றுமையின்றென்றபடியாம், இனிச் சாதிவேற்றுமையின்றென்பான் யான் அரசன் நீ வணிகன் என்றான். வணிகரும் அரசரோடொப்பர் என்பதுபற்றி இங்ஙனம் கூறினன்.

( 52 )
545 மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனந் தளிர்த்த தேபோல் சீதத்தன் றளிர்த்து நோக்கி
யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்ணை மென்று கேட்ப
முந்தைத் தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்புகின்றான்.

   (இ - ள்.) வற்றி நின்ற சந்தனம் மாரியால் தளிர்த்ததே போல் - மழையின்மையின் காய்ந்து நின்ற சந்தனம் மழையினால் தளிர்த்தது போல்; மந்திர மன்னன் சொல் நீர் சீதத்தன் தளிர்த்து நோக்கி - வித்தியாதர மன்னனின் சொல்லாகிய நீரினால் சீதத்தன் குளிர்ந்து மன்னனை நோக்கி; இன்னணம் எந்தைக்குத் தந்தை சொன்னான் என்று - இவ்வாறே என் பாட்டன் இயம்பினான் என்று; முந்தைத் தான் கேட்ட ஆறே முழுது எடுத்துக் கேட்ப இயம்புகின்றான் - முன்னர்த் தான் கேட்டவண்ணமே முழுதும் எடுத்து அரசன் கேட்குமாறு கூறுகிறான்.

 

   (வி - ம்.) சொல்நீர் - சொல்லினது நீர்மையாலே என்க. எந்தைக்குத் தந்தை என்புழி என் தந்தைக்கு அவன் தந்தையாகிய என்பாட்டன் என்க. இன்னணம் - இவ்வாறு.

( 53 )
546 வெள்ளிவே தண்டத் தங்கண்
  வீவில்தென் சேடிப் பாலிற்
கள்ளவிழ் கைதை வேலிக்
  காசில்காந் தார நாட்டுப்
புள்ளணி கிடங்கின் விச்சா
  லோகமா நகரிற் போகா
வெள்ளிவேற் கலுழ வேகன்
  வேதண்ட வேந்தர் வேந்தன்.

   (இ - ள்.) வெள்ளி வேதண்டத்து அம்கண் வீவு இல்தென் சேடிப் பாலில் - வெள்ளிமலையிலே அழகிய இடத்தையுடைய கெடுதியில்லாத தென் சேடியின் பக்கத்தில்; கள்