பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 327 

   (இ - ள்.) பல்வினைப் பவளப் பாய்கால் பசுமணி யிழிகை வம்பு ஆர் நல் அகில் விம்மு கட்டில் - பல தொழிற்கூறுகளையுடைய பவளத்தாற் பரந்த கால்களையும் புதிய மணியிழைத்த கைச் சுரிகையையும் உடைய மணங்கமழ் நல்ல அகிற்புகை பொங்கும் கட்டிலும்; தவி சொடு நிலைக்கண்ணாடி மெல்லிய தூப மேதகு நானச் செப்போடு - தவிசும் நிலைக்கண்ணாடியும் மென்மையான இந்தளமும் பெருமையுற்ற புழுகுச் செப்பும்; அல்லவும் - பிறவும்: அணங்கு உடை நிணம் கொள் வேலான் கொள்க என்றான் - துன்பந்தரும் ஊன்தங்கிய வேலையுடைய மன்னன் கொள்க என்றுரைத்தான்.

 

   (வி - ம்.) இந்தளம் - நெருப்பிடுங்கலம். ஒடு, ஓடு : எண்ணுப் பொருளன.

 

   தூபமுட்டி - இதனை இந்தளம் என்பர் நச்சினார்க்கினியர். இதனை இக் காலத்தார் ”தூபக்கால்” என்று வழங்கினர். இது தூபவகல் என்பதன் மரூஉப் போலும்.

( 66 )
559 விளக்கழ லுறுத்த போலும்
  விசியுறு போர்வைத் தீந்தேன்
றுளக்கற வொழுகி யன்ன
  துய்யறத் திரண்ட திண்கோல்
கொளத்தகு திவவுத் திங்கட்
  கோணிரைத் தனைய வாணி
யளப்பருஞ் சுவைகொ ணல்யா
  ழாயிர மமைக வென்றான்.

   (இ - ள்.) விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறுபோர்வை - விளக்கை அழலைச் சேர்த்தினாற் போலும் நிறத்தனவாய்த் தெரியாமற் போர்த்த போர்வையினையும்; தீ தேன் துளக்கு அற ஒழுகி அன்ன துய் அறத் திரண்ட திண்கோல் - இனிய தேன் அ¬வின்றி ஒழுகினாற் போன்ற தும்பு இன்றித் திரண்ட நரம்பு; கொளத்தகு திவவு - கொள்ளத் தக்க வார்க்கட்டினையும் உடையவாய்; திங்கள் கோள் நிரைத்தனைய ஆணி - கோள்களை நிரைத்தனைய எண்ணாள் திங்களைப் போலுமாறு ஆணிகளையுடைய; அளப்ப அருஞ் சுவை கொள் நல்யாழ் ஆயிரம் அமைக என்றான் - மதிப்பிடற் கியலாத இனிமை கொண்ட குற்றமற்ற யாழ்கள் ஆயிரம் கொண்டு வருக என்றான்.

 

   (வி - ம்.) கோள் நிரைத்த திங்கள் பத்தரில் தோலைச் சூழ முடுக்கின ஆணிக்கு உவமம். 'விளக்கழலுருவின் விசியுறுபச்சை' (பொருந-5) 'உருக்கினன்ன பொருத்துறு போர்வை' (பெரும்பாண்-9) 'தொடித்திரிவன்ன தொண்டுபடு திவவிற்-கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்