பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 33 

   திடை என்க. (மருதநிலத்துக் கயல் குறிஞ்சி நிலத்திலே வீழ்தலின் திணைமயக்கம் கூறியவாறு) 'கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே' (தொல்.மரபு- 17) என்றதனால், 'கன்று' என்றார்.

( 17 )
47 பாற்சுவை யறிந்தவை பழனத் தாமரை
மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினங்
கோற்றொடி நுளைச்சியர் முத்தங் கோப்பவ
ரேற்றிய மாலைத்தே னிரியப் பாய்ந்தவே.

   (இ - ள்.) அவை பாற்சுவை அறிந்த பழனத் தாமரைமேல் செலப் பாய்தலின்-அக்கயல்கள் அப்பாலின் சுவையை அறிந்து (நீரல்லாமையால்) கழனியில் உள்ள தாமரை மேலே செல்லப் பாய்தலின்; வெரீஇய வண்டினம் - (அதற்கு) அஞ்சி யெழுந்த வண்டின் திரள்; முத்தம் கோப்பவர் கோல்தொடி நுளைச்சியர் - முத்தைக் கோப்பவராகிய திரண்ட வளையலணிந்த நுளைச்சியர்; ஏற்றிய மாலை தேன்இரியப் பாய்ந்த - சூடிய மாலையில் வண்டினம் ஓடப் பாய்ந்தன.

 

   (வி - ம்.) 'பாற்சுவை தெரிந்தன' எனவும் பாடம்.

 

   இச் செய்யுளும் குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் மூவகை நிலங்களும் மயங்கக் கூறலின் திணை மயக்கம் கூறியபடியாம். நுளைச்சியர் : நெய்தல் நிலமகளிர் .

( 18 )
48 இரிந்ததேன் குவளையி னெற்றி தைவர
முரிந்துபோ தவிழ்ந்துகொங் குயிர்க்கு முல்லையின்
அரும்புசோ்ந் தணிஞிமி றார்ப்ப வாய்பதம்
விருந்தெதிர் கொண்மெனத் தழுவி வீழ்ந்தவே.

   (இ - ள்.) முல்லையின் அரும்பு போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் - முல்லையின் அரும்பு போதாக விரிந்து தேனைச் சொரியப்படும் ; குவளையின் நெற்றி இரிந்த தேன் சேர்ந்து - குவளை மலரின் நெற்றியிலே முன்பு இரிந்த தேனினம் சேர்தலால்; அணிஞிமிறு முரிந்து ஆர்ப்ப - அதிலிருந்த ஞிமிறுகள் முரிந்து ஆரவாரிக்க; ஆய் பதம் விருந்து எதிர்கொண்ம் எனத் தைவர - (அத்தேனினம்) இவ் அழகிய உணவை நுமக்கு விருந்திடுகின்றேம், இதனை ஏற்றுக்கொண்மின் என்று கூறினாற்போல அவற்றைத் தடவிக்கொடுக்க; தழுவி வீழ்ந்த - அந்த ஞிமிறுகள் அத்தேனினத்தைத் தழுவி அதிலே வீழ்ந்தன.

 

   (வி - ம்.) கொண்மின் : ('கொண்ம்' என ) விகாரம். இவற்றால் நில மயக்கங் கூறினார்.

 

   இச் செய்யுளிற் கொண்டு கூட்டுப் பொருள் கோள் மிகுதி. கொங்கு - தேன். ஞிமிறு , தேன் : வண்டின் இனங்கள்

( 19 )