பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 334 

   வஞ்சமின் மனத்தினான் என்றது சீதத்தனை. தான் பிறருக்கு நலமே செய்யும் தன்மையன் என்பது தோன்றப் பெருமகன் என்றார்.

( 82 )
575 நங்கைதன் னலத்தினான், மங்குல்வெள்ளி மால்வரை
யெங்குமன்ன ரீண்டினார், சங்குவிம்மு தானையார்.

   (இ - ள்.) மங்குல் வெள்ளி மால்வரை எங்கும் - முகில் தழுவும் பெரிய வெள்ளிமலை முழுவதும்; நங்கை தன் நலத்தினால் - தத்தையின் அழகை விரும்பி; சங்கு விம்மு தானையார் மன்னர் ஈண்டினார் - சங்குகள் முழங்கும் படையினையுடைய வேந்தர்கள் வந்து குழுமினர்.

 
576 ஈரலங்க லேந்துவே, லாரலங்கன் மார்பினான்
கார்கலந்த கைக்கணி, சீர்கலந்து செப்பினான்.

   (இ - ள்.) அலங்கல் ஏந்து ஈர் வேல் அலங்கல் ஆர் மார்பினான் - மாலையணிந்த, பகைவர் மார்பைப் பிளக்கும் வேலையும், மாலை பொருந்திய மார்பையும் உடைய அரசனுக்கு; கார் கலந்த கைக்கணி - முகில் அனைய கையுடைய கணியானவன்; சீர்கலந்து செப்பினான் - தத்தையின் சிறப்பை உளத்திற் கலந்து கூறினான்.

 
577 மாதர்வாழ்வு மண்ணதே! யாதலா லலங்கலந்
தாதவிழ்ந்த மார்ப! நின், காதலான் கடலுளான்.

   (இ - ள்.) அலங்கல் அம் தாது அவிழ்ந்த மார்ப - மாலைகளின் அழகிய தாது அவிழ்தற்குரிய மார்பனே!; மாதர் வாழ்வு மண்ணதே ஆதலால் - தத்தையின் வாழ்வு நிலவுலகிலே ஆகையால்; நின் காதலான் கடலுளான் - நின் நண்பன் கடலிடைச் செல்கிறான்.

 
578 என்றுகூற வென்னையே, துன்றுகாதற் றோழனைச்
சென்றுநீ கொணர்கென, வன்றுவந்த வண்ணமே.

   (இ - ள்.) என்று கூற - என்ற கணி கூறியதால்; என்னை நீ துன்று காதல் தோழனைச் சென்று கொணர்க என - என்னை (அரசன் நோக்கி) 'நீ என் அன்புறு நண்பனைப் போய்க் கொண்டு வருக' என்று சொல்ல; அன்று வந்த வண்ணம் - நான் அன்று வந்த வண்ணமாகும்.

 
579 துன்பமுற்ற வர்க்கலா, லின்பமில்லை யாதலி
னன்பமற்றி யானினைத், துன்பத்தாற் றொடக்கினேன்.