பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 348 

604 வான்றரு வளத்த தாகி வையகம் பிணியிற் றீர்க
தேன்றரு கிளவி யாருங் கற்பினிற் றிரித லின்றி
யூன்றுக வூழி தோறு முலகினுண் மாந்த ரெல்லா
மீன்றவர் வயத்த ராகி யில்லறம் புணர்க நாளும்.

   (இ - ள்.) வையகம் ஊழிதோறும் வான்தரு வளத்தது ஆகிப் பிணியின் தீர்க - உலகம் ஊழிதோறும் முகிலளிக்கும் மழை வளம்பெற்று நோயினின்றும் நீங்குக!; தேன்தரு கிளவியாரும் கற்பினின் திரிதல் இன்றி ஊன்றுக - தேனனைய மொழியினராகிய மகளிரும் கற்பிலிருந்து வழுவாமல் நிலைபெறுக!; உலகினுள் மாந்தர் எல்லாம் - உலகிலுள்ள மக்கள் யாவரும்; ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் நாளும் புணர்க - பெற்றோர்க் கடங்கினவராகி இல்லறத்தினை நாடொறும் புரிக!

 

   (வி - ம்.) வான் - மழை : ஆகுபெயர். மழைதரும் வளம் உலகின் கண் அறம்பொருள் இன்பங்கள் நடத்தற்கேது வாதல்பற்றி ”வான்தரு வளத்ததாகி வையகம் பிணியிற்றீர்க” என்றார். எனவே ”வீழ்க தண் புனல்” என்றவாறாயிற்று. பிணி பசித்துன்ப முதலியன அம்மழைக்கும் ஏதுவாதல்பற்றி ”கற்பினிற் றிரிதலின்றி ஊன்றுக” என்றார். ”அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்பதுபற்றி இல்லறம் புணர்க நாளும் என்றார். இதனால் தேவர் கருத்து வள்ளுவனார் கருத்தையே பெரிதும் தழுவிநிற்றல் உணரலாம். பிற்காலத்துச் சமணர் இந்நெறி கடந்து துறவினையே வற்புறுத்தி வந்தனர்.

( 112 )
605 தவம்புரிந் தடங்கி நோற்குந்
  தத்துவர்த் தலைப்பட் டோம்பிப்
பவம்பரி கெமக்கு மென்று
  பணிந்தவ ருவப்ப வீமி
னவம்புரிந் துடம்பு நீங்கா
  தருந்தவ முயன்மின் யாருஞ்
சிவம்புரி நெறியைச் சேரச்
  செப்புமிப் பொருளுங் கேண்மின்.

   (இ - ள்.) தவம் புரிந்து அடக்கி நோற்கும் தத்துவர்த் தலைப்பட்டு ஓம்பி - தவத்தைச் செய்து புலன் அடக்கி நோற்கும் உண்மையறிவினரைச் சென்று கண்டு வழிபட்டு; எமக்கும் பவம் பரிக என்று பணிந்து - எமக்கும் பவவினையைப் போக்குக என்று கும்பிட்டு; அவர் உவப்ப ஈமின் - அவர்கள் மகிழ்வனவற்றைக் கொடுமின்!; யாரும் அவம் புரிந்து உடம்பு நீங்காது சிவம்புரி நெறியைச் சேர அருந்தவம் முயல்மின் - யாவரும் வீண் செயல் செய்து உடலை விடாமல் நன்மை புரிந்த வீட்டை அடைய அவ்வுடம்பைக் கொண்டு அரிய தவத்திலே முயற்சி