பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 350 

முன் தவம் உடையள் ஆகி - முந்தைய நல்வினை உடையவளாய்; மூரி நூல் கலைகள் எல்லாம் கற்றவள் - பெருமை மிகும் இசை நூலிற் கூறிய கலைகள் முற்றும் அறிந்தவள்; கணம்கொள் நல்யாழ் அனங்கனைக் கனிக்கும் நீராள் - இசைத் தொகுதியுற்ற யாழினாலே காமனையும் உருக்கும் இயல்பினாள்.

 

   (வி - ம்.) அனங்கன் இசையறிவிற் சிறந்தவன். இதனைக், 'காமனுங் கனிய வைத்த புலம்' (சீவக. 370) என்ன முன்னரும், பின்னரும் சீவக. 729, 2637-ஆஞ் செய்யுட்களிலும் காண்க.

( 115 )
608 தீந்தொடை மகர வீணைத் தௌ்விளி யெடுப்பித் தேற்றிப்
பூந்தொடி யரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக்
கீந்திடு மிறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும்
வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை யென்றான்.

   (இ - ள்.) இறைவர் ஆதி மூவகைக் குலத்துளார்க்கும் - அரசர் முதலாக மூவகைக் குலத்தில் உள்ளவர் யாவரிலும்; தீ தொடை மகர வீணை - இனிய இசையை எழுப்பும் நரம்புகளையுடைய மகர யாழிலே; தௌ்விளி எடுப்பி தேற்றி - தெளிந்த இசையை எழுப்பித் தெளிவித்தலில்; பூ தொடி அரிவை தன்னின் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு - பூ வளையல் அணிந்த தத்தையினும் அறிவிற் சிறந்துள்ள ஒரு நம்பிக்கு; வேந்து அடு குருதி வேற்கண் விளங்கு இழை தாதை - அரசர்களை வருத்தும் இரத்தம் தோய்ந்த வேலனைய கண்ணாளும் விளக்கமான அணியுடையாளும் ஆகிய தத்தையின் தந்தை; ஈந்திடும் என்றான் - அளிப்பான் என்று முரசறைந்தான்.

 

   (வி - ம்.) பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நான்கினும் பத்தொன்பது நரம்புகளையுடைய மகரயாழே தத்தை பயில்வது என்பது தோன்ற, 'மகரவீணை' என்றார். 'ஒன்றும் இருபதும் ஒன்பதும் பத்துடனே, நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத, நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே - மேல் வகைய நூலோர் விதி' என்பதனால் முறையே 21, 19, 14, 7 - என நரம்பு கொள்க. [அரசர், அந்தணர் வணிகர் என்னும் மூவகைக் குலத்துளாரினும் என்பார் நச்சினார்க்கினியர். அரசர் ஆதி என்பதனால் அவள் அரசகுலமாகையால் அரசரை முற்கூறினார் என்றாலும் அங்ஙனங்கொள்வது சாலுமா என்பது சிந்திக்கத் தக்கது]. குலத்துளார்க்கு - குலத்துளாரில், (உருபு மயக்கம்),

( 116 )
609 மண்ணக மடந்தை யாக மார்புற முயங்கி நின்ற
வண்ணலை யாதி யாக வருங்கடி நகரை வாழ்த்தி
விண்ணக முழக்கி னேய்ப்ப வீதிதொ றெருக்கி யெங்குங்
கண்ணொளிர் கடிப்பி னோச்சிக் கடிமுர சறைந்த காலை,