பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 355 

616 விரைத்தகு நான நீரால்
  வெண்ணிறப் பொடியை மாற்றிப்
பரப்பினர் படுவண் டார்ப்பப்
  பன்மலர் பக்கம் எல்லாம்.

   (இ - ள்.) திருக்குழல் மடந்தை செல்ல - அழகிய குழலையுடைய தத்தை செல்வதற்கு; உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் எங்கும் - உருகுதல் பொருந்தி எரியும் பொன்னால் ஐந்துவிற்கிடை அகலமாக எங்கும்; திருநிலம் திருத்தி - நிலத்தைத் திருத்தஞ்செய்து; பின்னர் விரைத்தகு நானம் நீரால் - பிறகு, மணமிகு புழுகாலும் பனிநீராலும்; வெண்ணிறப் பொடியை மாற்றி - வெண்ணிறமான துகளை மாற்றிவிட்டு; பக்கம் எல்லாம் படுவண்டு ஆர்ப்பப் பன்மலர் பரப்பினர் - பக்கம் முழுவதும் வண்டுகள் முரலுமாறு பல மலர்களையும் பரப்பினர்.

 

   (வி - ம்.) எட்டுச் சாண் கொண்டது ஒரு வில் அளவு. 'அகலமாக' என்ற பாடத்தினும் 'அகலமெங்கும்' என்னும் பாடமே பொருத்தமாயுள்ளது.

( 124 )
617 விலைவரம் பறித லில்லா
  வெண்டுகி லடுத்து வீதி
அலர்தலை யனிச்சத் தம்போ
   தைம்முழ வகல மாகப்
பலபடப் பரப்பிப் பாவை
  மெல்லடிப் பரிவு தீர
நிலவரைத் தன்ன னாரை
  நிதியினால் வறுமை செய்தான்.

   (இ - ள்.) வீதி விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து - (அப்) பொன்னிலத்தே விலையின் அளவை அறியவியலாத வெண்மையான ஆடையை விரித்து; பாவை மெல் அடிப் பரிவுதீர - பாவையின் மெல்லடியின் துன்பம் நீங்குமாறு; அலர்தலை அனிச்சத்து அம்போது ஐம்முழ அகலம் ஆகப் பலபடப் பரப்பி - பரந்த அவ்விடத்தே அனிச்சத்தின் அழகிய மலரை ஐந்துமுழ அகலமாகப் பலபடப் பரப்பியதால்; நிலவரை தன்னனாரை நிதியினால் வறுமை செய்தான் - நிலவுலகிலே தன்னை யொப்பாரைச் செல்வத்தினால் வறியவர் ஆக்கினான்.

 

   (வி - ம்.) சீதத்தன் செய்யுஞ் செலவைக் கண்டு தங்கள் செல்வத்தால் இவ்வாறு செய்யமுடியா தென்று கருதியதால் 'வறுமை செய்தான்' என்றார்.

( 125 )