பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 36 

53 சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போன்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தோ்ந்தநூற்
கல்விசோ் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே.

   (இ - ள்.) சொல் அருஞ்சூல் பசும்பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று - நெல்லானது சூலுண்டென்று சொல்லற்கரிய பச்சைப் பாம்பின் தோற்றம்போல மெல்லக் கருத்தங்கி ஈன்று ; மேலலார் செல்வமேபோல் தலை நிறுவி - குடிப்பிறவாதார் செல்வத்தைப்போலத் தலையை நேரே நிறுத்தி ; தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்த- மெய்ப்பொருளை ஆராய்ந்த நூற்கல்வி பொருந்திய மக்களைப் போல மிகவும் வளைந்து விளைந்தன.

 

   (வி - ம்.) சொல் - நெல். அரு - சூலுண்டென்று சொல்லுதற்கரிய. மெல்ல - ஒழுக. தேர்ந்த - மெய்ப்பொருளை ஆராய்ந்த. ‘தாறு படுநெல்‘ என்றாற்போல, ‘காய்த்த ‘ என்றார்.

 

   செல்வமுடைய மேலலார்போல் தலைநிறுவி என்னவேண்டிய உவமையை மேலலார் செல்வமேபோல் தலைநிறுவி என்றது, உடையார் தொழில் உடைமைமேல் ஏற்றப்பட்டதொரு உபசார வழக்கு என்க.

( 24 )

54 மீன்கணி னளவும்வெற் றிடங்க ளின்மையால்
தேன்கணக் கரும்பியல் காடுஞ் செந்நெலின்
வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும்
ஊன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே.

   (இ - ள்.) மீன்கணின் அளவும் வெற்றிடங்கள் இன்மையால் - மீனினது கண்ணளவேனும் பாழ்நிலம் இன்மையால்; ஊன்கணார்க்கு உரைப்பரிது - மக்கட்குப் புகழ்தல் அரியதாய்; வான்புகழ் கழனி - வானவர் புகழும் கழனியில் ; தேன்கணக் கரும்பியல் காடும் - தேன் இறாலின் திரட்சியை உடைய கரும்பு வளர்ந்த வயலும் ; களிறுமாய் செந்நெலின் ஆக்கமும் - யானை நின்றால் மறையும் செந்நெல்லினது முதிர்ச்சியும்; உடைத்தாய் ஒல்என் சும்மைத்து - ஒல்லென்னும் ஓசையை உடைத்தாயிற்று.

 

   (வி - ம்.) முன் விளைவு கூறி, இதனால் முற்றினபடி கூறினார். மீன்கண் மிகவும் உருட்சியுடைமையின் இடங்குறித்தல் அரிது. (காடு-கழனி. 55 - ஆம் செய்யுளை நோக்குக.)

 

   இதன்கண் ‘களிறுமாய் கழனி‘ என்றதனோடு “களிறு மாய்க்கும் கதிர்க்கழனி “ எனவரும் மதுரைக்காஞ்சியினை ( 247) யும் நினைக. இத்தொடர்க் கருத்தை ‘களிறு மாய்க்குஞ் செந்நெல் அங்குலை “என்றும் (நைடதம் சுயம்வர - 138) , “யானை மறையக் கதிர்த்தலைச் சாலிநீடி“