(வி - ம்.) குலமகளிர் தங் கற்பொழுக்கத்திற் கறிகுறியாக முல்லை மலர் சூடுதல் ஒரு தமிழ் மரபு. இதனை, ”முல்லைசான்ற கற்பின்” (சிறுபாண். 30) என்றும், ”வாணுதலரிவை முல்லைமலைய” (ஐங். 408) என்றும், ”முடிசூட்டுமுல்லையோ முதற்கற்பு முல்லையோ” (தக்கயா. 119) என்றும், ”முல்லையந்தொடை அருந்ததி” (பிரபுலிங் - கைலாய. 27) என்றும், ”வண்முல்லை சூடுவ தேநலங் காண்குல மாதருக்கே” (குலோத்துங்க சோழன் கோவை. 168) என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இனித் தேவரே, ”முல்லைச்சூட்டு மிலைச்சி” (2438) என மேலுங் கூறுவர்.
|
( 132 ) |