பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 375 

   (இ - ள்.) தண் காஞ்சித் தாது ஆடி - குளிர்ந்த காஞ்சித் தாதினைப் பூசியதால் ; தன் நிறம் கரந்ததனை - தன் கரிய நிறம் மறைந்ததை ; கண்டு ஆனா மடப்பெடை - பார்த்துத் தெளி வடையாத இளம்பெடை ; கிளியெனப் போய்க் கைஅகல - கிளியெனச் சென்று கைவிட்டுப் போக ; நுண்தூவி இளஞ்சேவல் - நுண்ணிய தூவியையுடைய இளஞ்சேவல் ; நோக்கோடு விளி பயிற்றி - குறிப்பான நோக்குடன் பலகால் அழைத்து : தன் சிறகால் பெடை தழுவ - தன் சிறகினாற் பெடையைத் தழுவ; இளவேனில் தலைவந்தது - இளவேனில் அங்கே வந்தது.

 

   (வி - ம்.) கரிய நிறமுடைய குயிற்சேவல் காஞ்சித் தாதாடியதனால் அதன் பெடைக்குயில் கிளி என்று நினைத்து அகல அச் சேவல் தன் இனிய குரலாலே அதனை அழைத்துத் தழுவிற்று என்க. விளிபயிற்றி - பலகாலும் அழைத்து. தலை - இடம்.

( 157 )
650 குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி
வெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனை
மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக் கொளத்தேற்றி
யுறுப்பினா லடிபணியத் தலைவந்த திளவேனில்.

   (இ - ள்.) குறுத்தாள் குயில் சேவல் கொழுங் காஞ்சித் தாது ஆடி - குறுகிய கால்களையுடைய ஆண் குயில் கொழுவிய காஞ்சித் தாதிலே முழுகியதால்; மடப்பெடை ஆங்கே வெறுத்து விழைவு அகன்று நடப்பதனை - இளம்பெடை (கிளியென்று) அப்பொழுதே வெறுத்து வேட்கை நீங்கிச் செல்வதை; ஆங்கே மறுத்துச் சிறகு உளர்ந்து - அவ்வாறு செல்வதைத் தவிர்த்துச் சிறகினை உளர்ந்து; மகிழ்வு ஆனாக் கொளத் தேற்றி - மகிழ்ச்சி அமையாமற் கொள்ளுமாறு தெளிவித்து; உறுப்பினால் அடி பணிய - தலையினால் வணங்கும்படி; இளவேனில் தலைவந்தது - இளவேனில் அங்கே வந்தது.

 

   (வி - ம்.) பங்குனியிலும் சிறிது இளவேனில் தோன்றுதலின் இது கூறினார். வேட்கை விளையும் பருவத்தாளாகலின் இது கூறினார்.

 

   இம் மூன்றும் (648 - 50) ஒருபொருண்மேல் மூன்றடுக்கித் தாழம்பட்ட ஓசை பெற்று வந்த கொச்சக வொருபோகு. ஒருபோகென்பது பண்புத் தொகைப் புறத்தன்மொழி. இது, 'தரவின்றாகி' (தொல். செய். 149) என்னுஞ் சூத்திர விதி. இசை நூலோர் முகம், நிலை, முரி என்பனவற்றில் நிலை யென்பர் இதனை. [இனி இசை நூலாரும் இத்தரவு முதலாயினவற்றை முகம், நிலை, கொச்சகம், முரி என வேண்டுப. கூத்த நூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலைபெற அடக்கி முகம், நிலை, முரி யென மூன்றாக வேண்டுப. (தொல். செய். 132. பேர்)]; 'இனி, இசைத் தமிழில் வருங்கால் முகநிலை, கொச்சகம், முரி என்ப ஒருசாராசிரியர்' (சிலப். 6 : 35. அடியார்.)