பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 385 

   (இ - ள்.) முயற்கு மறு இவர்ந்த - முயலுக்காகத் தன்னிடத்தே மறுப்பரந்த; வேகம் மாசுணம் அடையப்பட்ட நிறைமதி போன்று - நஞ்சின் வேகத்தை இராகுவினால் அடைந்து ஒளி குன்றிய முழுமதிபோல; மன்னர் ஒளி குறைந்து உருகி நைய - அரசர்கள் ஒளிகுன்றி உளமுருகி வருந்த; அறுபகல் கழிந்த பின்றை - ஆறு நாட்கள் சென்ற பிறகு; அந் நகர்க்கு ஆதி நாய்கன் சிறுவன் - அந் நகரிலே முதன்மை பெற்ற வணிகன் மகன்; ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி யென்பான் - ஒப்பற்ற ஆண் சிங்கம் போன்ற சீவகசாமி என்பவன்.

 

   (வி - ம்.) ஆறுநாள் : ஒர மரபு. இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.

 

   இதன்கண் இக் காப்பியத்தலைவனாகிய சீவகசாமியை ஏதிலான் போல வைத்துத் தேவர் ”அந்நகர்க்கு ஆதிநாய்கன் சிறுவன் ஓர் சிங்க வேற்றை சீவகசாமி என்பான்” எனக் கூறியது இதுகாறும் காந்தருவதத்தையின்பாற் சென்றிருந்த நம் நெஞ்சத்தை அச் சீவகன் பாலிழுத்து வந்து அவனுடைய வரலாற்றினையும் பெருமையையும் நம்மை மீண்டும் ஒருமுறை நினைக்கும்படியும் அவனுக்கு இரங்கும்படியும் செய்துவிடுகின்றது. இத்தகைய செய்கைத் திறம் இவரனைய தெய்வப்புலவர்பால் மட்டுமே காணப்படும்.

( 173 )
666 தம்பியுந் தோழன் மாருந் தானுமற் றெண்ணிச் சூழ்ந்து
வெம்பிய வீணைப் போருட் செல்குவம் யாமு முன்னே
தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்ன
கந்துகற் கவனுஞ் சொன்னா னவனிது விளம்பி னானே.

   (இ - ள்.) தம்பியும் தோழன்மாரும் தானும் எண்ணி - தன் தம்பியும் தோழர்களும் தானுமாக இருந்து ஆராய்ந்து; சூழ்ந்து வெம்பிய வீணைப் போருள் யாமும் முன்னே செல்குவம் - அரசர்கள் ஆராய்ந்து மாறுபட்ட யாழ்ப் போரிலே அத் திரள் குலைவதற்கு முன்னே நாமும் செல்வோம் என்று; புத்திசேன தும்பு அற இது குரவற்கு சொல் என்ன - புத்திசேனனே! சிக்கற, 'சீவகன்வேட்கையாற் செல்கிறான் அல்லன்; கல்வி தோற்றுவித்தற்குச் செல்கின்றான்' என்று கொள்ளுமாறு இதனைத் தந்தைக்குக் கூறுக என்ன; கந்துகற்கு அவனும் சொன்னான் - கந்துகனுக்குப் புத்திசேனனும் கூறினான்; அவன் இது விளம்பினான் - அவனும் இதனைக் கூறினான்.

 

   (வி - ம்.) கூறுவது மேற்கூறுகின்றனர்.

 

   தும்பு, சிக்கு. தும்பறச் சொல்லியது என்றது சீவகன் காமவேட்கையாலே இங்ஙனம் செல்லத் துணிந்தான் என்று அவன் மாறுபட உணரும் அன்றே அம் மாறுபாடுண்டாகாத முறையில் சொல்லுக என்றவாறு, இதனால் சீவகசாமியின் பெருந்தன்மை தெற்றெனப் புலப்படுதல் உணர்க.

( 174 )