பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 388 

670 நம்பனை நகரி னீக்கிச்
  சேமத்தால் வைக்க தீயுட்
செம்பொன்போற் பெரிதுஞ் சேந்து
  செகுத்திட லுற்று நின்றான்
வெம்பினான் காரி யுண்டிக்
  கடவுளிற் கனன்று வேந்தன்
இம்பரின் றெனக்குச் சொன்னா
  னிதுபட்ட தடிகள் என்றாள்.

   (இ - ள்.) வேந்தன் செம்பொன்போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான் - அரசன் சிவந்த பொன்னைப் போல மிகுதியும் வெம்பி நம்பனை அழித்திடலை மேற்கொண்டு நின்றான்; காரி உண்டிக் கடவுளின் கனன்று வெம்பினான் - நஞ்சுண்ட சிவன்போலச் சீற்றங் கொண்டு புழுங்கினான்; இம்பர் இன்று எனக்குச் சொன்னான் - இங்கே இப்போது எனக்கு அதனைக் கூறவுஞ் செய்தான்; அடிகள் இதுபட்டது - அடிகளே! இது நிகழ்ந்ததாகும்; நம்பனை நகரின் நீக்கிச் சேமத்தால் வைக்க என்றாள் - (ஆகையால்) சீவகனை நகரினின்றும் நீக்கி ஒரு காவலான இடத்தே வைக்க என்றெழுதியிருந்தாள்.

 

   (வி - ம்.) காரி - நஞ்சு. நம்பன் : சீவகன்; சேமத்தால் : உருபு மயக்கம்.

 

   நம்பனை - சீவகனை. சேமம் - காவலையுடைய இடம், காரியுண்டிக் கடவுள் - சிவபெருமான். காரி - நஞ்சு. இம்பர் - இப்பொழுது. அடிகள் என்றது நாய்கனை முன்னிலைப்படுத்தி வரைந்தபடியாம்.

( 178 )
671 ஓலையை யவட்கு நீட்டி
  யொண்மணிக் குழையு முத்தும்
மாலையும் படுசொ லொற்றி
  வம்மென மறைய நல்கி
வேலைநெய் பெய்த திங்கள்
  விரவிய பெயரி னாற்கு
மேலைநாட் பட்ட தொன்று
  விளம்புவல் கேளி தென்றான்.

   (இ - ள்.) அவட்கு ஓலையை நீட்டி - அவளிடம் ஓலையைக் கொடுத்துப் பிறகு; மாலையும் படுசொல் ஒற்றி வம்என - மாலைப் பொழுதினும் கிடைக்குஞ் செய்தியை ஒற்றியறிந்து வருக என்று; ஒண்மணிக் குழையும் முத்தும் மறைய நல்கி - சிறந்த மணியழுத்தின குழையையும் முத்தையும் மறைவாக அளித்து;