பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து 4 

   இனி, தான் மூவா முதலாக வேண்டி யென்றும், நாம் மூவா முதலாக வேண்டி யென்றும் வினையெச்சமாக்குவாருமுளர்; அதற்கு எய்தி என்பதனோடு முடிக்க.

   மேல்வரும் செய்யுட்களுக்கும் இவ்வாறுரைப்பின் உரை பெருகும் ஆதலின், இனி நல்லறிவுடையோர் உய்த்துணருமாறு சுருங்கவுரைப்பாம். 'செம்பொன்' (சீவக - 2) என்னுங் கவியாற் குருக்கள் அருகனை வணங்குதலின் தாம் சிந்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன்வைக்க எனின், குருக்களே, 'இது நன்று; இதனை முன்னே வைக்க' என்றலின் முன் வைத்தார். குருக்கள்: திருத்தக்க தேவரின் ஆசிரியர்.

   யாமும் அவன் சேவடி சேரின் ஓவாது நின்ற குணத் தொண்ணிதிச் செல்வராய்த் தாவாத இன்பந் தலைப்படுவம் ஆகலானும், அவன் சேவடி சேர்வதும் என்றார் என்றும் கொள்க. கல்விப்பயனும் அவ் வாலறிவன் நற்றாள் தொழுதலே ஆகலின் இவ்விலக்கியத்தினை ஓதுவோர்க்கு இந்நூற்பயனைக் குறிப்பாகக் கூறியவாறுமாயிற்று.

   இறைவர் பற்பலர் உளர் என்பாரேனும் அவ்விறைவர்க்கெல்லாம் இறைவனாயுள்ள கடவுள் ஒருவனே என்பார் தேவாதிதேவன் என்றார்.

   அவன் திருவடி நினைத்தற்குஞ் சேர்தற்கும் இனிதாயிருக்கும் என்பார், ”தாவாத இன்பந்தன்னின் எய்தி ஓவாது நின்ற செல்வன் சேவடி ” என்றார். இச் செய்யுளில் உலகம் , தலையாய இன்பம், குணத்தொண்ணிதி, செல்வன், தேவாதிதேவன், என்னும் மங்கலச் சொற்கள் வந்துள்ளன.

( 1 )
2செம்பொன் வரைமேற் பசும்பொன்னெழுத் திட்ட தேபோ
லம்பொன் பிதிர்வின் மறுவாயிரத் தெட்ட ணிந்து
வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோ
ரம்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம்.

   (இ - ள்.) செம்பொன் வரைமேல் - சிறந்த பொன்மலையின் மேல்; பசும்பொன் எழுத்து இட்டதேபோல் - புதிய பொன் எழுத்தை எழுதியதே போலும்; அம்பொன் பிதிர்வின் - அழகிய பொற் பிதிரைப் போலும்; ஆயிரத்தெட்டு மறு அணிந்து - ஆயிரத்தெட்டு மறுவை அணிந்து; வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி -வெப்பந்தரும் இளஞாயிற்றின் ஒளியினும் மேம்பட்டு விளங்கும் உருவினையுடைய அருகப்பெருமானின்; விண்ணோர் அம்பொன்முடிமேல் - வானவரின் அழகிய பொன்முடியின்மேல் (வைத்த); அடித்தாமரை சென்னி வைப்பாம் - திருவடித் தாமரைமலர்களை யாமும் நம் முடிமேல் அணிவோம்.

   (வி - ம்.) பிதிர்வின், இன் : ஐந்தன் உருபு: உவமப்பொரு. உவமப்பொரு - ஒப்புமையுறக் கூறுதல். எழுத்திட்ட தென்றது ஒற்றுமையாகக் கிடந்ததற்கும் பிதிர்வென்றது சிறியவும் பெரியவுமாகிய வடிவிற்கும் உவமை. அருகனுக்கு இரேகை நூற்றெட்டும், அடையாளங்கள் ஆயிரமும்