பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 405 

எயிறு இலங்க நக்கு - கூரிய பற்கள் தோன்ற நகைத்து; ஆங்கு ஏதம் ஒன்று இல்லை, சேறும் என்றலும் - ஆங்குத் தீமையேதும் இராது; செல்வோம் என்ற அளவிலே; இலங்கு வாள் கைப்போது உலாம் கண்ணி மைந்தர் - விளங்கும் வாளேந்திய கையினரான, மலர் பொருந்திய கண்ணிகளையுடைய வீரர்கள்; போர்ப்புலிக் குழாத்தின் சூழ்ந்தார் - போர்க்குரிய புலித்திரள் போலச் சூழ்ந்தனர்.

 

   (வி - ம்.) கட்டியங்காரனால் ஏதம் வருமென்றற்கு நகைத்தானெனினும் தந்தை மொழியைக் கடவாமற் 'சேறும்' என்றான். ['சேடி கூற்றிற்கு நக்கான்; கந்துகன் ஏதமின்றென்றான்' என்று நச்சினார்க்கினியர் கூறினார்.]

( 202 )
695 கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரி குளித்த காமன்
மண்மிசைத் தோன்றி யன்ன வகைநல முடைய காளை
தெண்மணி யார மார்பன் றிருநுதன் மகளிர் நெஞ்சத்
துண்ணிறை பருகும் வண்டா ருருவமை திருவின் மிக்கான்.

   (இ - ள்.) கண்ணுதல் கடவுள் சீற - நெற்றிக் கண்ணையுடைய கடவுள் சீறுதலின்; கனல் எரி குளித்த காமன் - கனலும் தீயிலே முழுகிய காமன்; மண்மிசைத் தோன்றி அன்ன - மீண்டும் நிலத்தின்மேல் தோன்றினாற் போன்ற; வகை நலம் உடைய காளை - உறுப்பழகுடைய சீவகன்; தௌ்மணி ஆரம் மார்பன் - தெளிந்த மணியும் ஆரமும் உடைய மார்பன்; திரு நுதல் மகளிர் நெஞ்சத்து - அழகிய நெற்றியை உடைய மகளிரின் உள்ளத்தின்; உள்நிறை பருகும் - உள்ளே பொருந்திய நிறையைப் பருகும்; வண்தார் உரு அமை திருவின் மிக்கான் - வளவிய தாரணிந்த அழகு பொருந்திய செல்வம் உடையவன் ஆனான்.

 

   (வி - ம்.) திருவின் மிக்கான்: பெயருமாம். இதுமுதல் நான்கு செய்யுட்கள் சீவகன் அணிசெய்து கொண்டதைக் கூறும்.

 

   கண்ணுதற் கடவுள் - சிவபெருமான். கனலெரி : வினைத்தொகை. அதனால் சீவகன் இயற்கை அழகு தெரித்துக் கூறி மேலே செயற்கை அழகோதுகின்றார்.

( 203 )
696 கருநெறி பயின்ற குஞ்சிக் காழகில் கமழ வூட்டி
வரிநிற வண்ண மாலை வலம்பல மிலைச்சி வாளார்
திருநிற முகத்திற் கேற்பச் செம்பொனோ ரோலை சோ்த்தி
யெரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடர வைத்தான்.

   (இ - ள்.) கருநெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி - கரிய நெறி பழகிய குஞ்சியிலே கரிய அகிற் புகை