பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 407 

   (இ - ள்.) இரும்பு அறக் கழுவி எஃகின் இருள் அற வடிக்கப்பட்ட - இரும்பை முற்றும் உருக்கிய எஃகினால் ஒளியுற வடித்துச் செய்யப்பட்ட; அரும்பெறல் சுரிகை - அருமையாகக் கிடைக்கும் சுரிகையை; பெருந்தகைக் குருசில் - பெருந்தகையாகிய குருசில்; கொண்டு கச்சு இடைக் கோத்து வாங்கி - கையிற் கொண்டு கச்சை இடையிலே கோத்து வாங்கி; பெருவலம் சுடர வீக்கி - பெரிய வெற்றி தோன்ற இறுக்கிக் கட்டி; திருந்து இழை மகளிர் வெஃகும் தேஇளங்குமரன் ஒத்தான் - விளங்கும் இழையணிந்த பெண்கள் விரும்பும் தெய்வமாகிய முருகனைப் போன்று காணப்பட்டான்.

 

   (வி - ம்.) 'சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை' (பெரும்பாண். 73) என்றார் பிறரும்.

 

   உருக்குதலானே இரும்பின் மாசு தீர்தலால் உருக்குதலைக் கழுவி என்றார். சுரிகை - உடைவாள். பெருந்தகைக் குருசில் - பெரியதகுதிப் பாட்டினையும் தலைமைத் தன்மையையும் உடைய சீவகன். தேவிளங்குமரன் என்றது முருகக் கடவுளை.

( 206 )
699 வரைவிழித் திமைப்ப தொக்கும்
  வாளொளி யார மார்பின்
விரைவழித் திளைய ரெல்லாம்
  விழுமணிக் கலங்க டாங்கி
நுரைகிழித் தனைய நொய்ம்மை
  நுண்டுகின் மருங்குல் சோ்த்தி
புரைகிழித் துணரு மொப்பி
  னோவியப் பாவை யொத்தார்.

   (இ - ள்.) இளையர் எல்லாம் - மற்ற இளைஞர் யாவரும்; வரைவிழித்து இமைப்பது ஒக்கும் - மலை விழித்து ஒளிர்வதைப் போன்ற; வாள் ஒளி ஆரம் மார்பின் - ஒளிவிடும் முத்தணிந்த மார்பிலே; விரைவழித்து - மணந்தருங் கலவையைப் பூசி; விழுமணிக் கலங்கள் தாங்கி - சிறந்த மணிப்பூண்களை அணிந்து; நுரைகிழித்த அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி - நுரையைக் கிழித்தாற் போன்ற மெல்லிய நுண்ணிய ஆடையை இடையிலே அணிந்து; உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார் - சொல்லால் உரைத்தற்கரிய உள்ளத்தால் உணரும் ஓவியப் பாவையைப் போன்றார்.

 

   (வி - ம்.) பாவை இருபாற்கும் பொது. 'கைபுனை பாவை யெல்லாம் கதிர்முலை ஆக்கினான்' (607) என்றதனானுங் கொள்க. [இமைத்து விழிப்ப தென்றார் அசைவின்கட் பாடஞ் செய்தலின்.]