பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 409 

   விடுகணை: வினைத்தொகை. இவுளி - குதிரை. காலியல்புரவி - காற்றை ஒத்த குதிரை. அடுதிரை - கரையை மோதும் அலையையுடைய கடல்: அன்மொழி. நகர் - மண்டபம்.

( 209 )
702 தோற்றனண் மடந்தை நல்யாழ்
  தோன்றலுக் கென்று நிற்பார்
நோற்றன ணங்கை மைந்த
  னிளநல னுகர்தற் கென்பார்
கோற்றொடி மகளிர் செம்பொற்
  கோதையுங் குழையு மின்ன
வேற்றன சொல்லி நிற்பா
  ரெங்கணு மாயி னாரே.

   (இ - ள்.) கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன - திரண்ட வளையல்களையுடைய மங்கையர் பொன் மாலையும் குழையும் மின்னுமாறு (வந்து); தொன்றலுக்கு மடந்தை நல்யாழ் தோற்றனள் என்று நிற்பார் - சீவகனுக்குத் தத்தை நல்ல யாழிலே தோற்றாள் என்று நிற்பாரும்; மைந்தன் இளநலம் நுகர்தற்கு நங்கை நோற்றனள் என்பார் - சீவகனுடைய இளமையின்பத்தை நுகரத் தத்தை நோற்றாள் என்பாரும்; ஏற்றன சொல்லி நிற்பார் - (இவைபோல மேலும்) பொருந்துவன புகன்று நிற்பாருமாக; எங்கணும் ஆயினார் - எவ்விடத்தும் நிறைந்தனர்.

 

   (வி - ம்.) இவன் கல்வி உணர்தலின் தெளிவு பற்றித், 'தோற்றனள்' என்று இறந்த காலத்தாற் கூறினர்.

( 210 )

வேறு

 
703 சுறாநி றக்கொ டுங்குழை சுழன்றெ ருத்த லைத்தர
வறாம லர்ததே ரியலா னழன்று நோக்கி யையெனப்
பொறாம னப்பொ லிவெனு மணிக்கை மத்தி கையினா
லறாவி வந்து தோன்றினா னனங்க னன்ன வண்ணலே.

   (இ - ள்.) சுறாநிறக் கொடுங்குழை சுழன்று எருத்து அலைத்தர - மகர வடிவமான, நிறமுடைய, வளைந்த குழை சுழன்று பிடரிலே அலைக்க; அறா மலர்த் தெரியலான் - மணம் நீங்காத மலர்மாலையானான கட்டியங்காரன்; அழன்று நோக்கி ஐ என - எரிவுடன் பார்த்து வியப்புற; பொறாமனம் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு என்னும் மணிக்கைப் பிடியுடைய குதிரைச் சவுக்காலே; அறாவி - அடித்து; அனங்கன் அன்ன அண்ணல் வந்து தோன்றினான் - காமனையனைய காளை வந்து தோன்றினான்.