பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 41 

பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும் - குழைந்த இனிய பண்டத்தை யேற்றி இடைவிடாது போகும் பண்டியும் ;

 

   (வி - ம்.) மெல்லிலை : வினைத்தொகை. பழுக்காய்-பாக்கு,

( 33 )
63 கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியு
நெருங்குபு முதிரையி னிறைந்த பண்டியும்
பெருங்கலிப் பண்டிகள் பிறவுஞ் செற்றுபு
திருந்தியெத் திசைகளுஞ் செறிந்த வென்பவே.

   (இ - ள்.) கருங்கடல் வளம்தரக் கரையும் பண்டியும் - கரிய கடலின் வளத்தை நகர்க்குத் தருதற்கு முழங்கும் பண்டியும் ; நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும் - நெருங்க முதிரையால் நிறைந்த பண்டியும்; பிற செற்றுபு பெருங்கலிப் பண்டிகளும் - ஒழிந்த பண்டங்கள் நிறைத்துப் போரொலியையுடைய வரும் பண்டிகளும்; திருந்தி எத்திசைகளும் செறிந்த - ஒழுங்காக எல்லாத் திசைகளினும் நெருங்கின.

 

   (வி - ம்.) கடல்வளமாவன : ”ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம் - நீர்ப்படும் உப்பினோ டைந்து. ” நெருங்குபு : நிகழ்காலம் உணர்த்தும். பிறவும் : உம்மை (பண்டிகளும் என) மாறுக. 'செற்றுபு' என்னும் எச்சம் ' ஒலியை உடைய' என்னும் விரியொடு கூடும்.

 

   நகர்க் கரையும் பாடமாயின், கரைதல் திசைச் சொல்லாய்க், 'கொண்டு போம்' என்னும் பொருள் பயக்கும்.

 

   முதிரை - அவரை துவரை முதலியன.

( 34 )
64 கிளிவளர் பூமரு தணிந்து கேடிலா
வளவயல் வைகலு மின்ன தென்பதேன்
றுளியொடு மதுத்துளி யறாத சோலைசூ
ழொளியமை யிருக்கையூ ருரைக்க நின்றவே.

   (இ - ள்.) கிளிவளர் பூமருது அணிந்து - கிளி வாழும் மலர்ந்த மருதினால் அணியப்பட்டு; கேடிலா வளவயல் வைகலும் இன்னது- கெடுதியில்லாத வளமுற்ற வயல் நாடொறும் இத்தன்மைத்து ; உரைக்க நின்ற - இனி, யான் உரைப்பதற் கிருப்பவை ; தேன் துளியொடு மதுத்துளி அறாத - தேன்துளியும் மதுவின் துளியும் நீங்காத ; சோலைசூழ் ஒளி அமை இருக்கை ஊர் - பொழில்கள் சூழ்ந்த, ஒளிபொருந்திய குடியிருப்பையுடைய (நாட்டில் உள்ள) ஊர்கள்.

 

   (வி - ம்.) கேடு ”விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு ; நட்டம் பெரும்பெயல் கால் எட்டு. ” என்ப : அசை. தேன். (தேனீக்கள் கொண்டுவந்து) வைத்த தேன். மது - பூவின் மது.