பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 411 

உவந்து இருந்தது ஒத்தது - உதயம் என்னும் பெரிய மலைமீது மகிழ்ந்து இருந்தது போன்றது.

 

   (வி - ம்.) புதிதின்; இன் : அசை. போகு உயர்மதி - உயர்ந்த மதி. மலையும் மதியமும் சுடரும், மண்டபத்திற்கும் அணைக்கும் சீவகனுக்கும் உவமை.

( 213 )
706 முருகு விம்மு கோதையார் மொய்ய லங்கல் வண்டுபோற்
பருகு வானி வண்ணலம் பாரித் திட்ட விந்நக
ருருகு மைங்க ணையொழித் துருவி னைய காமனார்
கருதி வந்த தென்றுதங் கண்கள் கொண்டு நோக்கினார்.

   (இ - ள்.) மொய் அலங்கல் வண்டுபோல் - நெருங்கிய அலங்கலில் வண்டு தேன் பருகுதல் போல; இவள் நலம் பருகுவான் கருதி - இவள் அழகைப் பருக நினைத்து; பாரித்திட்ட இந் நகர் - இவள் அழகு பரவிய இந் நகரிலே; உருவின் ஐய காமனார் உருகும் ஐங்கணை ஒழித்து - உருவினால் வியப்பூட்டுங் காமனார், உளமுருகும் ஐங்கணைகளை நீக்கி; வந்தது என்று - வந்ததாகிய தன்மையென்று எண்ணி; முருகு விம்மு கோதையார் - மணம் விரியும் மாலை மங்கையர்; தம் கண்கள் கொண்டு நோக்கினார் - தம் கண்களைக் கொண்டு அவனைப் பார்த்தனர்.

 

   (வி - ம்.) ஐங்கணை இரண்டு வகை.

 
  'அந்தண் அரவிந்தம் மாம்பூ அசோகப்பூ  
  பைந்தளிர் முல்லை பனிநீலம் - ஐந்துமே  
  வீரவேல் மைந்தரையும் வேனெடுங்கண் மாதரையும்  
  மாரவேள் எய்யும் மலர்.'  

   இவை திரவிய பாணம்; இங்கிதம், மதனம், வசீகரணம் மோகனம். சந்தாபம் - இவை பாவபாணம்.

( 214 )
707 முனைத்தி றத்து மிக்கசீர் முனைவர் தம்மு னைவனார்
வனப்பு மிக்க வர்களின் வனப்பு மிக்கி னியனா
நினைத்தி ருந்தி யற்றிய நிருமி தம்ம கனிவன்
கனைத்து வண்டு ளர்ந்ததார்க் காளை சீவ கன்னரோ.

   (இ - ள்.) முனைத் திறத்து மிக்கசீர் முனைவர் தம் முனைவனார் - தவம்செய் திறத்தால் மேம்பட்ட சிறப்புடைய தவத்தினரின் மேம்பட்ட அயனார்; வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்க இனியன்ஆ - அழகு மிகுந்தவர்களினும் அழகின் மேம்பட்ட இனியவனாக; நினைத்திருந்து - (படைக்க) எண்ணியிருந்து; இயற்றிய நிருமித மகன் இவன் - படைத்த படைப்பு மகனாகிய இவன்; கனைத்து வண்டு உளர்ந்ததார்க் காளை சீவகன் - முரன்று வண்டுகள் கிண்டிய மாலை யணிந்த காளையாகிய சீவகனாவான்.