பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 415 

 

   (இ - ள்.) கண் எனும் வலையின் உள்ளான் - (என் மனமாகிய) கண் என்னும் வலையினுள் இருக்கின்றான்; கை அகப்பட்டிருந்தான் - (அதனால் அவன்) என் கையில் அகப்பட்டுள்ளான் (ஆகிய); பெண் எனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி - பெண்மை என்னும் தடையை மீறும் பேரழகுடைய இந்த நம்பி; என் இதில் படுத்த ஏந்தல் - என்னை இந் நிலையிற் பிணித்த ஏந்தல்; ஒள் நிற வுருவச் செந்தீ உருவு கொண்டனைய வேலான் - ஒளியும் நிறமும் உருவும் உடைய செந்தீயே ஒரு வடிவங்கொண்டாற் போன்ற வேலினான்; எண்ணின் யாவன் ஆம் கொல்? - ஆராயின வானவனோ? மகனோ? யாவனோ?

 

   (வி - ம்.) இவள் விஞ்சையர் மகளாதலின் தன் மனக்கண்ணால் இவனை அறிந்தாள். எனவே, 'கண் வலையினும் கையினும் அகப்பட்டான்' என்றாள். தன் மேல் அவனுக்கு வேட்கை நிகழாததால், 'பெண்ணெனும் உழலை பாயும்' என்றாள். 'யாவனாங்கொல்' - இது 1.ஐயம் என்னும் மெய்ப்பாடு. 'சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப - இழிந்தழியிழிபே சுட்ட லான' (தொல். களவு -3) என்பதனால், தலைவிக்கு ஐயம் நிகழாதேனும், ஈண்டுக் களவன்மையானும் தன் மனக்கண்ணால் ஐயந்தீர்தல் வன்மையானும் ஐயம் நிகழ்ந்தது. மக்களால் தன்னை வருத்தலாகாமை முன்னே காண்டலின், 'என்னை இவ் வருத்தத்திலே அகப்படுத்தின ஏந்தல்' என்றாள்.

( 221 )
714 யாவனே யானு மாக வருநிறைக் கதவ நீக்கிக்
காவலென் னெஞ்ச மென்னுங் கன்னிமா டம்பு குந்து
நோவவென் னுள்ளம் யாத்தாய் நின்னையு மாலை யாலே
தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக வென்றாள்.

   (இ - ள்.) யாவனே யானும் ஆக - நீ தேவனெனினும் மகனெனினும் ஆகுக; அருநிறைக் கதவம் நீக்கி - என் அரிய நிறையாகிய கதவைத் திறந்து; காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து - காவலையுடைய என் உள்ளம் ஆகிய கன்னிமாடத்திலே நுழைந்து; என் உள்ளம் நோவ யாத்தாய் - என் உள்ளம் வருந்தப் பிணித்தாய்; மாலையாலே நின்னையும் தேவரின் செறிய யாப்பன் - என் இயல்பினாலே நின்னையும் வானவரைப்போல இமையா நாட்டமுறும்படி இறுகப் பிணிப்பேன்; சிறிது இடைப்படுக என்றாள் - சிறிது பொழுது கழிக என்றாள்.

 

1. ஐயம்: ஒரு பொருட்கண் இரு பொருட் டன்மை கருதி வரும் மனத்தடுமாற்றம்.