பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 416 

   (வி - ம்.) 'யாவனேயானுமாக' - இஃது 1.ஆராய்ச்சி என்னும் மெய்ப்பாடு. 'யாத்தாய்' - இஃது 2.எதிர்பெய்து பரிதல் என்னும் மெய்ப்பாடு. மேல் மாலையாலே பிணிப்பதுந் தோன்ற 'மாலையாலே யாப்பன்' என்றாள்.

( 222 )
715 கழித்தவே லேறு பெற்ற
  கடத்திடைப் பிணையின் மாழ்கி
விழித்துவெய் துயிர்த்து மெல்ல
  நடுங்கித் தன் றோழி கூந்த
லிழுக்கிவண் டிரியச் சோ்ந்தோர்
  கொடிப்புல்லுங் கொடியிற் புல்லி
யெழிற்றகை மார்பற் கின்யா
  ழிதுவுய்த்துக் கொடுமோ வென்றாள்.

   (இ - ள்.) கழித்த வேலேறு பெற்ற - உறை கழித்த வேலால் தன் மார்பிலே எறியப்பட்ட; கடத்திடைப் பிணையின் மாழ்கி - காட்டில் உள்ள பெண்மானே போல வருந்தி; விழித்து வெய்து உயிர்த்து - திகைத்துப் பெருமூச்செறிந்து; மெல்ல நடுங்கி - மெல்லென நடுங்கி; தன் தோழி கூந்தல் வண்டு இழுக்கி இரியச் சேர்ந்து - தன் தோழி வீணாபதியின் கூந்தலில் உள்ள வண்டு தப்பி ஓடுமாறு நெருங்கி: ஓர் கொடிப் புல்லும் கொடியின் புல்லி - ஒரு கொடியைத் தழுவும் மற்றொரு கொடியைப் போலத் தழுவி; எழில்தகை மார்பதற்கு இன்யாழ் இது உய்த்துக் கொடு என்றாள் - அழகிய தகுதிவாய்ந்த மார்பனாகிய இவனுக்கு இனிய யாழாகிய இதனை உய்த்தறியுமாறு கொடு என்றாள்.

 

   (வி - ம்.) கொடுமோ - மோ : முன்னிலையசைச்சொல். உய்த்துக் கொடுத்தலாவது பல யாழ்களையும் கொடுத்து யாழறியும் அவனறிவை உய்த்தறிந்து பிறகு இனிய யாழைத் தருதல். 'மாழ்கி விழித்து உயிர்த்து' என்பதை 3.இடுக்கண் என்னும் மெய்ப்பாடு. 'நடுங்கி' - இது 4.நடுக்கம்' என்னும் மெய்ப்பாடு. 'கொடிப் புல்லுங் கொடியிற் புல்லி'

 

1. ஆராய்ச்சி: ஒரு பொருளை நன்று தீது என்று ஆராய்தல்.

 

2. எதிர்பெய்து பரிதல்: உருவ வெளிப்பாடு; தலைமகனையும் அவன் தேர் முதலாயினவற்றையும் தன் எதிர் பெய்து கொண்டு பரிந்து கையறுதல்.

 

3. இடுக்கண்: மலர்ந்த நோக்கம் இன்றி மையல் நோக்கம்பட வரும்.

 

4. நடுக்கம்: அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படு மாற்றான் உள்ளம் நடுங்குதல். புதல்வர்க்குப் பிணியில் வழியும் எவனாங்கொல் என்று நடுங்குதல் அன்பால் நடுங்குதல். அச்சம் என்னும் சுவை பிறந்த பின்னர் அதன் வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தால் தோன்றிய நடுக்கம்.