மிக்க அழகுடைய கண்ணாள், இன்பத்தோடு ஒப்பாள், அவள், 'வேலான், வனப்புடைய நம்பி, என்னிதிற் படுத்த ஏந்தல், இவன் ஆராய்ந்தால் யாவனாங் கொல்' என ஐயுற்று, 'யாவனே யானும் ஆக; நமது ஞானக்கண்ணிடத்தான் : அதனால், யான் நோக்கினவிடத்துக் கையகப்பட்டேயிருந்தான்; அங்ஙனமிருந்து கடைந்திடுகின்ற காளையது மார்பு இயைவது என்றாவது கொல்லோ'. என்று ஐயுற்று நோக்கி, அக்காலம் சிறிது நீட்டித்தலின், அதற்கு ஆற்றாது, சிறையைக் கைபோய், நாண் வேலியைப் பாய்ந்து காமத் தீ எரிய நின்றாள்; அப்போது எரியுறு மெழுகின் நின்றாள், அங்ஙனம் நின்று மாழ்கி விழித்து உயிர்த்து நடுங்கிமெல்லத் தோழி மேலே விழுந்து அவளைப்புல்லி, அங்ஙனம் கையாறுற்ற விடத்துத் தன் மனத்து நின்ற தலைவனை நோக்கி, 'நீக்கி, மாடம் புகுந்து, யான் நோம்படி என்னுள்ளத்தைப் பிணித்தாய்; நின்னையும் பிணிப்பேன்; சிறிது பொழுது கழிக' என்றாள்; பின்பு தன் நெஞ்சினை நோக்கி, 'நெஞ்சே! நலன் உண்ணப்பட்ட நம்பி ஈயின்றி யிருந்த தீந்தேனாதலால், மகளிர் முன்னே புலம்பா தொழிக' என்று ஆற்றுவித்துத் தேற்றிப் பின்பு தோழியை நோக்கி, 'இனிய யாழிது உய்த்துக்கொடுமோ' என்றாள்.
|
( 223 ) |