பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 419 

718 வோரு முருமே றிதுவுண்ட
  தொழிக வொண்பொன் னுகுகொடியே
சீர்சால் கணிகை சிறுவன்போற்
  சிறப்பின் றம்ம விதுவென்றான

   (இ - ள்.) வார்நின்று இளகும் முலையினாய் - வார் இளகுறு முலையினாய்!; ஒண்பொன் உகு கொடியே; - சிறந்த ஒளியைச் சிந்தும் பொற்கொடியே!; இது நீர் நின்று இளகிற்று, வேண்டா - இது நீரில் நின்று மெலிந்ததாகையால் வேண்டா; நீரின் வந்தது இது போக - நீரிலே அழுகியதாகிய இது செல்க; வாள் புண் உற்றது இது நடக்க - வாளால் வெட்டுற்றதாகும் இதுபோக; உருமேறு உண்டது இது ஒழிக - இடியினால் தாக்கப்பட்ட இது நீங்குக; இது சீர்சால் கணிகை சிறுவன்போல் சிறப்பின்று - இது புகழ் பொருந்திய கணிகை மகன் போலச் சிறப்பில்லாதது; என்றான் - என்று சீவகன் கூறினான்.

 

   (வி - ம்.) கட்ட ஆதார மின்மையின் வார் இளகியது. வேண்டா, நடக்க, போக, ஒழிக என்றன இகழ்ச்சி.

( 226 )
719 கல்சோ் பூண்கொள் கதிர்முலையாய்
  காமத் தீயால் வெந்தவர்போற்
கொல்லை யுழவர் சுடப்பட்டுக்
  குரங்கி வெந்த திதுகளிறு
புல்ல முரிந்த தெனப்போக்கித்
  தூம மார்ந்த துகிலுறையும்
நல்யாழ் நீட்ட வதுகொண்டு
  நங்கை நலத்த திதுவென்றான்.

   (இ - ள்.) கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் - கல்போல் இறுகிய அணிகலன் கொண்ட கதிர்த்த முலையினாய்!; காமத்தீயால் வெந்தவர்போல் - காமத் தீயினால் வெந்தவர்களைப் போல; கொல்லை உழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்தது இது - முல்லை நிலத்திலே உழவராற் சுடப்பட்டுத் தாழ்ந்து வெந்தது இது; களிறு புல்ல முரிந்தது இது - களிறு தழுவ முரிவுற்றது இது; எனப் போக்கி - என்று போக்கிவிட்டு; தூமம் ஆர்ந்த துகில் உறையும் நல்யாழ் நீடட - அகிற்புகை யூட்டப் பெற்ற, துகிலினால் மூடப் பெற்றிருந்த அழகிய யாழை நீட்ட; அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான் - அதனை ஏற்றுத் தத்தை போலவே குல முதலியன சிறப்புற்றது இது என்றுரைத்தான்.