பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 429 

   ['சிலைத் தொழில்' 'கருங்கொடி' என்னும் (சீவக. 657 - 8) பாடல்களால் தெய்வத் தன்மை பொருந்திய பாட்டுடையள் என்று கூறி வைத்து, ஈண்டுக் கற்றடிப் படுத்தாதாரைக் கூறுமாறு போல, 'விருந்தாக யாழ் பண்ணி' (730) என்றற்கு, யாழ் பண்ணும் முறைமையன்றி' யென்றும், 'பண்ணொன்று பாடலது ஒன்று' என்றதற்கு யாழும்மிடறும் வேறுபட்டதென்றும், 'விண்ணின்றியங்கி' என்பதற்கு அந்தர ஓசையென்றும் கூறுதல் தேவர் கருத்தன்மை யுணர்க. காமத்தாற் கலங்கி இவள் தோற்றாள் என்னிற் சீவகற்கு இசை வென்றி யின்மையும் உணர்க. - என்பர் நச்சினார்க்கினியர். இவர் கூற்றுத் தேவர் கருத்தாக இருக்குமேல் அக் கருத்துப் புலப்படவே செய்யுள் கூறுவர். அவ்வாறு கூறாமையாலும், தன்னினுஞ் சிறந்தான் சீவகனென்றறிந்தவுடன் தன் திறமையிலே நடுக்கங் காணுதல் தத்தைக்கு இயல்பாகையால், அதனானே சீவகன் வென்றிக்குக் குறைபாடின்மையாகவே கொள்ள வேண்டும். ஆகையாலும் தேவரின் செய்யுட்கட்குச் சொற்கிடந்தாங்குப் பொருள் கோடலே பொருத்தம்.] மற்றும் உள்ளாளத்திலே கம்பிதங்கலத்தற்கும் அவளுடைய காம நினைவே காரணமாகும்.1.

( 243 )
736 மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து
நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப்
பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலை
பெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே.

   (இ - ள்.) மை ஆர் நெடுங்கண்ணாள் பெண் அரசி - மையுண்ட பெருங்கண்ணாளாகிய பெண்ணரசி; மாமணியாழ் தான் உடைந்து - சிறந்த யாழிசை யிலே தான் தோற்றலால்; நையா நடுநடுங்கா நனிநாணம் மீதூரா - நைந்து நடுநடுங்கி (அவையிற் செல்ல வேண்டுதலின்) சாலவும் நாணம் மிகுந்து (அதனால்); பொய்யாது ஓர் குன்று எடுப்பாள்போல் மெலிந்து - உண்மையாகவே ஒரு மலையை யெடுப்பாள் போன்ற மெலிவுடன்; பொன் மாலை பெய்பூங்கழலாற்கு ஏந்தினள் - பொன்மாலையைப் பூங்கழலணிந்த சீவகனுக்கு ஏந்தினாள்.

 

   (வி - ம்.) நைந்து நடுங்குதல் 2.'இழவு' என்னும் மெய்ப்பாடு, வெற்றியை இழத்தலின், நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழ்தலின் 3.'நாண்' என்னும் மெய்ப்பாடு. தோல்வி தோன்ற மாலையிடுதலின் மேல் 4.'இளிவரவு' என்னும் மெய்ப்பாடு.

 

1. சீவகனும் தத்தையும் யாழிசையிலே சிறந்தவர்களாக வைத்துத் தத்தை தன் காதலுள்ளத்தாலே கலக்கமுற்றுத் தோற்றாளென்று கூறுதலே தேவர் கருத்தாக இருக்கவேண்டும் என்பது செய்யுட்கிடக்கை நன்கு புலப்படுகின்றது.

 

2. இழவு: தந்தைதாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல்.

 

3. நாண்: நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி.

 

4. இளிவரல்: இழிவு; தானிழந்து பிறிதோரு பொருளை வியப்பது. (தொல்.மெய்ப் 5,12, 3.பேர்.)