பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 43 

ஆடல்போன்ற - (கழாயினின்றும் இழிந்து) பக்கத்தில் அமைந்த கயிற்றிலே குதித்துப் பலவகை அணிகலன்களும் ஒலிப்ப ஆடுங்கூத்தியின் கூத்தைப் போன்றன ; நாரை காண்ப ஒத்த - (கரையில் இருந்த) நாரைகள் காண்பன போன்றன.

 

   (வி - ம்.) குவளைக் குழியில் (வள்ளைக் கொடிபடா) நாட்டின கழையும் அதிற் படர்ந்த கொடியும், அதிற் பாய்கின்ற மீனும், கழாயும் அதன்கீழ் இழிந்து ஆடுங் கயிறும் கூத்தியும் போன்றன ; வடிவும் தொழிலும் உவமம். காண்ப; அகரவீற்றுப் பலவறி சொல்; தொழிற் பெயராய் (வினையாலணையும் பெயராய்) நின்றது. (கழாய், கழை மூங்கில். பாடு - பக்கம். ஒத்த : பலவின்பால் வினைமுற்று).

 

   வள்ளைக் கொடியின்மேல் வாளைமீன் பாய்தல் கயிற்றிற் பாய்ந்து ஆடாநின்ற கூத்தியின் கூத்துப் போன்றிருந்தது; கரைக்கண் கூடியிருந்த நாரைக் குழாம் கூத்தாடல் காண்பாரை ஒத்திருந்தது என்பதாம்.

( 37 )
67 காவியன்ன கண்ணினார் கயந்தலைக்கு டைதலி
னாவியன்ன பூங்துகி லணிந்தவல்குற் பல்கலை
கோவையற் றுதிர்ந்தன கொள்ளும்நீர ரின்மையின்
வாவியாவும் பொன்னணிந்து வானம்பூத்த தொத்தவே.

   (இ - ள்.) காவி அன்ன கண்ணினார் கயம்தலைக் குடைதலின்-காவியனைய கண்களையுடைய மகளிர் வாவியிடத்தே விளையாடுதலின் ; ஆவி அன்ன பூந்துகில் அல்குல் அணிந்த பல்கலை கோவை அற்று உதிர்ந்தன - பாலாவியன்ன பூவேலை செய்த ஆடையையுடைய அல்குலின் மேலணிந்த பல கலைகள் வடமற்று உதிர்ந்தன ; கொள்ளும் நீரர் இன்மையின் - அவற்றை எடுப்பார் இல்லாமையால் ; வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்த - வாவிகள் எல்லாம் மேகலையை அணிந்து, வானம் மீனைப் பூத்த தன்மையை ஒத்தன.

 

   (வி - ம்.) கயந்தலை : விகாரம் (கயத்தலை எனல் வேண்டும்) பொன் : (கருவி) ஆகுபெயர். மேகலைக்கு உறுப்பானவை அற்று வீழ்ந்தன.

 

   கலை - மேகலை என்னும் அணிகலன். கொள்ளுநீரர் இன்மையின் என்றது பிறர் வீழ்த்த பொருளைத் தானும் எடுத்துக்கொள்ளாத நற்பண்புடையோர் அந்நாட்டு மக்கள் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. எனவே, அந்நாட்டிற் கள்வாரிலாமை கூற வேண்டாதாயிற்று என்றபடி, இதனோடு,

 
  ”மண்ணு நீராட்டின் மலைந்தன ராகி  
  வண்ண மணியும் வயிரமும் முத்தும்  
  இட்டன கொள்ளும் முட்டின ராதலின்  
  வான மீனின் வயின்வயின் இமைக்கும். ”  

   எனவரும் பெருங்கதையினையும் (2-5: 54-6) நினைக.

( 38 )