பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 433 

   (இ - ள்.) வடதிசைக் குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர் - இமயமலை அனைய சிறப்புற்ற அரச மரபுக்குக் குற்ற முண்டாக்கினீர்; விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் - ஞாயிற்றின் ஒளிக்கு முன்னர் மின்மினி ஒளி போன்றீர்; வாள் அமர் அஞ்சினீரேல் - வாட்போருக்கு அஞ்சினீரெனின்; வடுஉரை என்று மாயும் - பழிச்சொல் எப்போது மறையும்; அளியிர் முடிதுறந்து போகி முனிவனம் புகுமின் என்றான் - இரங்கத் தகுந்த நீவிர் அரசை விடுத்துச் சென்று முனிவர் தவவனத்தை யடைந்து தவம புரிவீராக என்றான்.

 

   (வி - ம்.) 'வணிகன் மகளை அரசன் மணம் புரிவது தகும்; அரசன் மகளை வணிகன் புரிதல் மாசுடைத்து' என்னும் வழக்குப்பற்றி 'மாசு செய்தீர்' என்றான்.

 

   எவற்றினும் உயர்ந்து திகழுவது நம்மரசகுலம் என்பான் 'வடதிசைக்குன்றம் அன்ன வான்குலம்' என்றான்.

 

   இனி, இச்சீவகன் ஒளியே உலகெலாம் பரவ நும்மொளி மழுங்கும் என்பான், 'விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்' என்றான்.

 

   இனி இப்பழிப்பட்ட நுமக்கிவ்வுலகில் இன்பமும் இல்லை என்பான் 'முனிவனம் புகுமின்' என்றான்.

( 250 )
743 மல்லுப்பூத் தகன்ற மார்பீர்
  புகழெனும் போர்வை போர்த்துச்
செல்வப்பூ மகளு நாளை
  அவனுழைச் செல்லு மென்றான்.
முல்லைப்பூம் பந்து தன்னை
  மும்மதக் களிற்று வேலிக்
கொல்லைப்பூங் குன்றஞ் செய்தீர்
  குங்குமக் குழங்கன் மாலை

   (இ - ள்.) மல்லுப் பூத்து அகன்ற குங்குமக் குழங்கல் மாலை மார்பீர்! - மற்போரில் மலர்ந்தகன்ற, குங்குமமுடைய மணமுறுமாலை யணிந்த மார்பீர்!; முல்லைப் பூம்பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக் கொல்லைப் பூங்குன்றம் செய்தீர்! - முல்லை மலர்ப் பந்தை (கையாற் கசக்கி யெறியாமல்) மும்மதக்களிற்றை வேலியாகவுடைய காட்டிலே அழகிய மலையாக ஆக்கிவிட்டீர்; செல்வப் பூமகளும் புகழெனும் போர்வை போர்த்து - செல்வத் திருமகளும் புகழாகிய போர்வையைப் போர்த்து; நாளை அவனுழைச் செல்லும் என்றான் - நாளைக்கு அவனிடம் செல்வாள் என்றான்.