பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 437 

னேன் - இச் செயலை (நீரே பாவமும் பழியு மென்றறிவீராயினும் நுமக்கு மாறாய யான் நும் நலங்கருதி) வேண்டிக் கூறினேன்; வழிமுறை வந்த ஆறே திசைமுகம் வல்லே படர்க - (இனி) அடைவே வந்த வழியே திக்கிடங்களிலே விரையச் செல்வீராக.

 

   (வி - ம்.) (யானையாகிய) விலங்கறியும் நுமக்கின் றென்றான். யானை நாதத்தில் தோன்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பு.1.

 

   யானையால் வேறும் என்றது போர் செய்து அதனால் வெல்வேம் என்றவாறு. இதற்கு நச்சினார்க்கினியர் இசைக்கு வணங்கும் யானை என வேண்டாது விரிக்கின்றார்.

 

   ”தீண்டினாற் சுடுவதன்றே தீ யென்பது; இப் பிறர்மனை நயக்கின்ற தீவினையாகிய தீ நினைப்பினும் சுடுவது ஒன்று கண்டீர்”. எனவரும் நச்சினார்க்கினியர் உரை மிகவும் நுண்ணிதாம்.

( 256 )
749 தோளினான் மிடைந்து புல்லுந்
  தொண்டைவா யமிர்தம் வேட்டோர்
வாளினான் மலைந்து கொள்ளின்
  வாழ்கநுங் கலையு மாதோ
கோளுலாஞ் சிங்க மன்னான்
  கொடியினை யெய்தப் பெற்றீர்
தாளினால் நொய்யீ ராகித்
  தரணிதா விடுமி னென்றான்.

   (இ - ள்.) வேட்டோர் தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் - இன்பத்தை விரும்பினோர் தோளினால் நெருங்கித் தழுவிப் பெறுகின்ற அமிர்தத்தை; வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும் - வாளாற் பொருது வலிதிற் பெறின் நுங்கள் கலையும் நூறுபெற்று வாழ்வதாக! ; கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்த - கொலையில் வல்ல சிங்கம் போன்ற சீவகன் தத்தையினை அடைய; தரணி பெற்றீர் - நீர் உலகினைப் பெற்று நின்றீர்; தாளினால் நொய்யீர் ஆகி-இனி முடியா முயற்சியில் மெலிவீராகி; தா விடுமின் என்றான் - (அதனால் உண்டாகும்) வருத்தத்தைக் கைவிடுவீராக என்றான்.

 

   (வி - ம்.) தா - வருத்தம். இவை இரண்டு செய்யுளும் சாமம். விலிந்து கொள்கின்ற இராக்கதம், 'முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே' (தொல் - களவு 14) என்பதனால், ஒருதலைக் காமமாகிய

 

1. உதயணன் யாழ் அவன் உஞ்சையிலிருந்து வந்தபோது பிடி மிசையிருந்து வழுக்கி வீழ்ந்தது காற்றில் ஒலிக்கும்போது யானைகள் குழுமி நின்று கேட்பதைப், 'பிறப்புணர்பவைபோல் இறப்பவும் நிற்ப' எனக் குறிப்பது காண்க (பெருங் - 4 - 3: 80 - 90.)