பக்கம் எண் :

                 
காந்தருவ தத்தையார் இலம்பகம் 468 

பொருக்கின் நிலை இவ்வளவு என்று காட்டுவனபோல; களிற்று உகிர் பிறழ்பல் பேய்கள் கைகளை உச்சிக் கூப்பி - களற்றின் நகங்கள்போல முறை குலைந்து பிறழ்ந்த பற்களையுடைய பேய்கள் உச்சியிலே கைகளைக் கூப்பி; அளித்தவை பாடி ஆட - சீவகன் அளித்த சிறப்புக்களைப் பாடி ஆட; வேழம் குறு நரி நக்கு விளித்தன - வேழத்தின் அருகே யிருந்த குள்ளநரிகள் அப் போயாடலைக் கண்டு நகைத்தன போலக் கூவின; கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த - அவ் வேழத்தைத் தின்று செருக்கிக் கிடந்த கழுகும் பருந்தும் பேயாடற்கு நகைத்து விலா முறிந்து கிடந்தன போன்றன.

 

   (வி - ம்.) வேழத்தின் அருகே வேழத்தைத் தின்று நின்றன நரிகள்.

( 312 )
805 கடல்விளை யமுதங் கண்ட
  பொழுதினெய் கனிந்த தீஞ்சொற்
றடிசிலஞ் சுவைமிக் காங்கு
  மண்ணலங் குமர னொன்னா
ருடலின்மேற் றிரியுந் திண்டோ்
  காண்டலு மைந்தர் நெஞ்சத்
திடல்பிளந் திட்ட வெஃகஞ்
  சுமந்தமர்த் திறத்தின் மிக்கார்.

   (இ - ள்.) கடல்விளை அமுதம் கண்ட பொழுதின் - கடலில் விளையும் உப்பினைக் கண்ட காலத்தே; நெய்கனிந்த தீஞ் சோறு அடிசில் அம் சுவை மிக்காங்கு - நெய்யொடு கலந்த இனிய சோறாகிய அடிசில் ஒழிந்த சுவைகள் மிகுந்தாற்போல; அண்ணல் அம் குமரன் ஒன்னார் உடலின்மேல் திரியும் திண்தேர் காண்டலும் - பெருமை மிக்க சீவகனுடைய, பகைவருடலின்மேற் செல்லும் திண்ணிய தேரைக் கண்டவுடன்; மைந்தர் - சீவகன் தோழர்கள்; நெஞ்சத் திடல் பிளந்திட்ட எஃகம் சுமந்து - பகைவரின் நெங்சமாகிய திடரைப் பிளந்த வேலை யேந்தி; அமர்த்திறத்தின் மிக்கார் - போர்த் திறத்திலே மிகுந்தனர்.

 

   (வி - ம்.) மிக்காங்கும் : உம் : இசை நிறை. சீவகனைக் கண்ட தோழர் களித்திதை இச் செய்யுளிற் கூறினர்.

 

   இதன்கண் சீவகன் தேரைக் கண்டு ஊக்கமிக்கவராகிய தோழர்க்கு உப்போடளாவியவுடன் தத்தஞ் சுவை மிகுத்து விளங்கும் அடிசிலை உவமையாகக் கூறியது மிகமிக நுணுக்கமாகிப் பெரிதும் இன்பஞ் செய்தல் உணர்க.

( 313 )