பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 474 

வென்று செகுப்பவோ என்ன வேண்டா - வென்று போக்குவரோ? என்று ஐயுற வேண்டா; செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே? - நெருங்கிய பற்களையுடைய ஆளி ஒன்றே களிற்றுப் பெருங் கூட்டத்தைக் கெடுத்ததன்றோ?: உறுபுலி ஒன்றுதானே கலையினம் உடற்றிற்று அன்றே?- வலிமை மிகும் புலி ஒன்றே மான் கூட்டத்தைக் கெடுத்தது அன்றே? இவற்றைக் கண்டு தெளிக.

 

   (வி - ம்.) பின்னிரண்டடியும் எடுத்துக் காட்டுவமை.

( 322 )
815 நல்லவை புரியு மாந்தர்
  நாந்தகம் பிழைத்து வீழா
வல்லவை புரியு மாந்தர்க்
  கத்திர மொன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார்
  வெற்றிலை விடினும் வேலா
மில்லையே வென்றி தீமை
  யிடங்கொண்ட மனத்தி னார்க்கே.

   (இ - ள்.) நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா - நன்மை செய்யும் மனமுடையார்க்கு வாட்கள் தவறிக் கெடமாட்டா; வெல்வதோ - வெற்றியைப் பற்றிக் கூறுவதாயின; குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம் - பண்பிற் சிறந்தார் வெற்றிலையை எதிரிகள்மேல் விடினும் வேல்போல வென்றி தரும்; அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா - தீமை செய்யும் மனமுடையார்க்குப் படைகளில் ஏதும் வாய்க்காது; தீமை இடங்கொண்ட மனத்தினார்க்கு வென்றி இல்லை - தீமை குடிகொண்ட வுள்ளத்தார் எப்போதும் வெற்றியில்லை.

 

   (வி - ம்.) 'அல்லவை புரியும் மாந்தர்க்கு நல்லவை புரியும் மாந்தர்' எனக் கூட்டித் 'தத்தையை வலிதிற் கோடற்கு ஒருப்பட்டவர்க்குப் பதுமுகன் கூறிய கட்டியங்காரன் சூழ்ச்சியைத் தீமை செய்வார்க்கு நன்மை புரிந்ததாக்கிக் கூறுவர். சிறப்பினதேற் கொள்க.

 

   குணத்தின் மிக்கார், தீமையிடங் கொண்ட மனத்தினார் என்பவை சுட்டு. தீமை - பிறர்மனை நயத்தலாகிய தத்தையை விரும்பியது. 'இனி வேறும் பொருள்தருமேனும் அதற்கு இயைபின்று' என்னும் நச்சினார்க்கினியர் கூற்றினை நோக்கின் வேறு பொருளும் பிறர் கூறினர் என்று தெரிகிறது.

 

   இதனால் தேவர் 'அறம் வெல்லும் பாவந் தோற்கும்' என்னும் பழமொழியை வற்புறுத்தோதினர் என்க.