பக்கம் எண் :

                         
காந்தருவ தத்தையார் இலம்பகம் 478 

போர் கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கினான் - போர்க் களத்திலே நேர்ந்த பாவத்தையும் வெறுப்பையும் நீக்கினான்.

 

   (வி - ம்.) செற்றவரைச் செகுத்தல் அறமே ஆயினும் இவர் ஆதியான பகைவர் அல்லாமையின், 'பாவம்' என்றார். புலம்பு - என்ன செய்துவிட்டோம் என்ற வெறுப்பு.

 

   பண்ணவன் உருவம் - அருகக் கடவுள் திருவுருவம். உறுபொருள் - மிக்க பொருள்.

( 328 )
821 செய்தவப் பாவ மெல்லாந்
  தீர்த்திடுந் தீர்த்தன் பாத
மெய்திய சேடங் கூலித்
  திறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மையறு மணியிற் செய்த
  வலம்புரி யதனீர் கொண்டான்
வையக மளிக்க நீண்ட
  வலம்புரித் தடக்கை யானே.

   (இ - ள்.) வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கையான் - உலகைக் காப்பதற்கு நீண்ட, வலம்புரி யி«கையுடைய பெரிய கையினான்; செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம் எய்திய சேடம் - பல பிறப்பினும் புரிந்த அப்பாவம் முழுதும் நீக்கும் அருகனின் திருவடிகளிலே பொருந்திய நிர்மாலியத்தையும்; மை அறும் மணியின் செய்த வலம்புரிய தன் நீர் - குற்றமற்ற இழைத்துச் செய்யப்பட்ட வலம்புரியில் உள்ள நீரையும்; கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்திக் கொண்டான் - கூவுவித்து வணங்கித் தொழுது வாழ்த்தி ஏற்றுக் கொண்டார்.

 

   (வி - ம்.) கூவித்து - விகாரம். கூவுவித்து - கூப்பிட்டு. வலம்புரி வடிவாக மணிகள் இழைத்து உலோகத்தாற் செய்யப்படுவது. வலம்புரி கையிற் கிடத்தல் சிறந்த இலக்கணம்.

 

   சேடம் - பலியிடப்பட்ட பொருள். தீர்த்தன் - அருகன். வலம்புரி - சங்கு வடிவமாகச் செய்யப்பட்டதொரு பூசைப் பாத்திரம். வலம்புரித் தடக்கை - சங்கரேகை கிடந்த பெரிய கை.

( 329 )

வேறு

 
822 கருமணி யழுத்திய காமர் செங்கதிர்த்
திருமணிச் செப்பெனச் செறிந்த வெம்முலை
யருமணி யலம்வரு மம்பொற் கொம்பனாள்
பெருமணக் கிழமையாம் பேசு கின்றதே