பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 488 

840 பஞ்சுசூழ் பரவை யல்குற்
  பசுங்கதிர்க் கலாபம் வீங்கச்
செந்தளிர்க் கோதை சோரக்
  கிண்கிணி சிலம்பொ டேங்க
மைந்தருட் காம னன்னான்
  மகளிருட் டிருவ னாளை
யந்தரத் தமரர் பெற்ற
  வமிர்தெனப் பருகி னானே.

   (இ - ள்.) பஞ்சுசூழ் பரவை அல்குல் பசுங்கதிர்க் கலாபம் வீங்க - ஆடை யணிந்த பரந்த அல்குலிலே புத்தொளிக் கலாபம் இறுக; செந்தளிர்க் கோதை சோர - சிவந்த தளிர் மிடைந்த மலர்மாலை அவிழ; கிண்கிணி சிலம்பொடு ஏங்க - கிண்கிணியுஞ் சிலம்பும் ஒலிக்க; மைந்தருள் காமன் அன்னன் - ஆடவர்களிற் காமனைப் போன்ற சீவகன்; மகளிருள் திருவனாளை - பெண்களில் கண்டார் விரும்பும் தன்மையைப் போன்றவளை; அந்தரத்தமரர் பெற்ற - வானுலகிலே அமரர்கள் பெற்ற; அமிர்து எனப் பருகினான் - அமிர்தம் போல நுகர்ந்தான்.

 

   (வி - ம்.) திரு - கண்டார் விரும்புந் தன்மை; 'திருவளர் தாமரை' (திருச்சிற்.1) போல. பஞ்சு: கருவியாகுபெயர்.

 

   பஞ்சு, ஆடைக்கு ஆகுபெயர். கலாபம் - ஒருவகை மேகலையணி, காமனன்னான்: சீவகன்; திருவனாள் - தத்தை. 'பருகுதல் ஈண்டு அதரபானமும் அல்குற் பானமும்' என்பர் நச்சினார்க்கினியர்.

( 348 )
841 இளமுலை மணிக்கண் சேப்ப
  வெழுதுவிற் புருவ மேறக்
கிளைநரம் பனைய தீஞ்சொற்
  பவளவாய் திகழத் தேன்சோர்
வளமலர்க் கோதை தன்னை
  வாய்விடான் குழையப் புல்லி
யளமர லிலாத வின்பக்
  கடலகத் தழுந்தி னானே.

   (இ - ள்.) தேன் சோர் வளமலர்க் கோதை தன்னை - தேன்பிலிற்றும் வளமிகும் மலர்க்கோதை போல்வாளை; இளமுலை மணிக்கண் சேப்ப - இளமுலைகளின் கரிய மணி போன்ற கண்கள் சிவப்பவும்; எழுது வில் புருவம் ஏற - எழுதிவைத்த வில்போன்ற புருவங்கள் நெற்றியில் ஏறவும்; குழையப் புல்லி - குழையுமாறு தழுவி; கிளை நரம்பு அனைய தீ சொல் பவளவாய் திகழ -