பக்கம் எண் :

                           
காந்தருவ தத்தையார் இலம்பகம் 493 

   (இ - ள்.) ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணா - நலமுற வேண்டியவை நலம்பெறும் அந்நலத்தை எவராலும் அழிக்கவியலாது; போம் பொருள் போகும் - அழியும் பொருள் அழியும்; (அழிவைத் தடுக்கவும் யாராலும் முடியாது); அவை பொறியின் வகை வண்ணம் - அவை இருவினைப் பயனாகிய ஊழின் கூறுபாட்டுத் திறம்; தேம் புனலை நீர்க்கடலும் சென்று தரல் இன்று - இனிய நீரை உப்புநீர்க் கடலும் உலகிடைச் சென்று தருதல் எப்போதும் இன்று; மழை யாறு வீங்கு புனல் வேண்டி அறியாது - முகில் யாற்றுக்கு மிக்க நீரைக் கொடுக்க விரும்பி அறியாது.

 

   (வி - ம்.) அது என்று ஒருமையாற் சுட்டினார், அழிக்க ஒண்ணாத் தன்மையைக் கூறலின். கட்டியங்காரன் ஆக்கத்திற்கும் சச்சந்தன் அழிவிற்கும் வருந்தாதொழிக என்று சீவகனுக்குத் தேறுதல் கூறினான். 'தேம் புனலை உவர் நீர்க்டல் தராது' என்பது 'தீய பண்புடையோர் பிறர்க்கு நன்மை செய்ய அறியார்; கட்டியங்காரனும் எப்போதும் நமக்குத் தீங்கிழைப்பான். அதனால், தீமையும் அடைவான்' என்றுணர்த்தியது. 'யார்கண்ணும் இகந்துசெய் திசைகெட்டான் இறுதி போல் - வேரொடு மரம் வெம்ப விரிகதிர் தெறுதலின்' (கலி.10) என்றார் பிறரும். முகில் யாற்றுக்கு நீரை அது விரும்பாதேயுங் கொடுத்தல் போல நல்லோரும் பிறர்க்கும் எப்போதும் நலமே செய்வாராதலின், சீவகனும் நலம்புரிக என்றான்.

 

   இதுவரை ஓலைப்பாசுரச் செய்தி. இனி, 'எள்ளுநர்கள்' (சீவக. 847) என்னுஞ் செய்யுளளவும் ஓலைப் பாசுரமாக்கி அது கேட்ட சீவகன் கூறுகின்றானென ஆக்குவாரும் உளர். அதற்கு, இகல் ஏத்திக் கொடியெடுத்த தென்று, அவன் வியந்ததற்குத் தான் வென்றானாகக் கூறாது, ஆக்கமுங் கேடும் பொறியின் வகை என்றான் ஆக்குக; ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ஆற்றிலே உவமை கொள்க. கடல் வேண்டாதிருக்கப் புனல்தானே போனது போம்பொருட்கும், யாறு மேகத்தை வேண்டாதிருக்கப் புனல்தானே நிறைகை ஆம் பொருட்கும் உவமை. சென்றுதரல் - போய்க்கொண்டு வருதல்.

 

   இச்செய்யுள் :

 
  ”பரியினும் ஆகாவாம் பாலல்ல வுய்த்துச்  
  சொரியினும் போகா தம” (குறள் - 376)  

என வரும் திருக்குறளையும்,

 
  ”உறற்பால நீக்கல் உறவர்க்கும் ஆகா  
  பெறற்பா லனையவு மன்னவாம் - மாரி  
  வறப்பிற் றருவாரு மில்லை அதனைச்  
  சிறப்பிற் றணிப்பாரும் இல்” (நாலடி. 104)  

   எனவரும் நாலடியையும் நினைப்பிக்கின்றது.

( 356 )